சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்னை சந்தித்து குறைகளை தெரிவித்தார் டி.டி.வி.தினகரன் பரபரப்பு பேட்டி


சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்னை சந்தித்து குறைகளை தெரிவித்தார் டி.டி.வி.தினகரன் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 9 Oct 2018 11:15 PM GMT (Updated: 9 Oct 2018 5:27 PM GMT)

சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்னை சந்தித்து குறைகளை தெரிவித்தார் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:–

நக்கீரன் கோபால் கைது தவறில்லை


கேள்வி: கவர்னர் குறித்து அவதூறு பரப்பியதாக நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டுள்ளரா?

பதில்: அவதூறாக, எந்தவித ஆதாரமில்லாமல் தனிநபர்கள் மீது செய்திகளை வெளியிடுவது தவறு. அந்த அடிப்படையில் கவர்னர் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறியுள்ளதால் நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். ஜனநாயகத்தின் 4–வது தூண்கள் நீங்கள்(பத்திரிகையாளர்கள்). உண்மை செய்தியை வெளியிடும்போது யாரும் கேட்க மாட்டார்கள்.

கேள்வி: நக்கீரன் கோபால் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சரி என்கிறீர்களா?

பதில்: அவதூறாக, ஒரு சொல்லமுடியாத விமர்சனத்தை பத்திரிகையில் எழுதினால் நடவடிக்கை எடுக்கத்தானே செய்வார்கள். நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது தவறாக தெரியவில்லை. பொய்யான தகவலை தெரிவித்தால், காவல்துறைக்கு அதிகாரம் இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கத்தானே செய்வார்கள். இதே நக்கீரன் கோபால் என்மீது அவதூறாக எழுதியதற்காக கடந்த 2009–ம் ஆண்டு அவர் மீது வழக்கு தொடர்ந்தேன். அவருக்கு 6 மாத சிறைத்தண்டனை பெற்றுக்கொடுத்தேன். அவர் மீது தனிப்பட்ட வெறுப்பு எனக்கில்லை. ஒரு பத்திரிகையாளர் அவ்வாறு செய்யக்கூடாது என்பதுதான் என்நிலை. அதை எதிர்த்து அப்பீல் சென்றார். நான் நினைத்தால் அந்த வழக்கை திரும்ப நடத்தி இருக்க முடியும். ஆனால், நான் அதை செய்ய விரும்பவில்லை.

அ.தி.மு.க. எடுத்தது தற்கொலை முடிவா?


கேள்வி: பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என்று கூறினீர்கள். நேற்று பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிசாமி சந்தித்ததின் மூலம் அ.தி.மு.க. கூட்டணி அமையுமா?

பதில்: அது பற்றி எனக்கு தெரியவில்லை. நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணிக்கு போகவிரும்பவில்லை. அதைத்தான் தற்கொலைக்கு சமம் என்றேன். தமிழ்நாட்டில், மக்களுடைய எண்ணங்கள் என்னவென்று எல்லோருக்கும் தெரியும். அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கைக்கும், பா.ஜனதா கொள்கைக்கும் ஒத்துவராது. அதனால், அப்படி தெரிவித்தேன்.

கேள்வி: அப்படியானால், அ.தி.மு.க. தற்கொலை முடிவை எடுத்ததாக சொல்லலாமா?

பதில்: அது அவர்களைத்தான்(அ.தி.மு.க.) கேட்க வேண்டும்.

விஜயபாஸ்கர் சந்தித்தது உண்மை


கேள்வி: ஓ.பன்னீர்செல்வம் உங்களை சந்தித்தை ஒத்துக்கொண்டார். அதுபோல சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்தை ஒத்துக்கொள்ளவில்லையே?

பதில்: சந்தித்தது உண்மை. அது நடைபயிற்சியின்போது இருவரும் சந்தித்து கொண்டோம். அவர் வணக்கம் தெரிவிக்கவே, நானும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தேன். மறுபடியும் நின்று பேசமுயற்சித்தார். பின்னர் நின்றுகொண்டே பேசினார். அது பெரிய வி‌ஷயம் அல்ல. ஆனால், சில குறைகளை தெரிவித்தார். அதை என்னிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லையே. அவரிடம் இரட்டை வேடம் போடாதீர்கள் என்றுதான் கூறினேன். அதேபோன்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் பெரிய ஞானிபோல பேசுகிறார். அது நாகரீகமா? என தெரியவில்லை. அதாவது மனிதத்தன்மை இல்லாமலேயே பேசுகிறார். மனிதர்களுக்கு மனிதத்தன்மை இருக்கும். மனிதத்தன்மை பற்றி ஓ.எஸ்.மணியன் பேசுவதுதான் எனக்கு சிரிப்பாக இருக்கு. ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்தித்தது ரகசியமான சந்திப்பே கிடையாது. எங்களுடன் இருப்பவர்களுக்கு அது தெரியும். அப்போது அதை சொல்லவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இப்போதுகூட அதை சொல்லவேண்டிய அவசியத்தை உருவாக்கியதே ஓ.பன்னீர்செல்வம்தான். அரசியல் லாபத்துக்காக அதை சொல்லவில்லை. சி.சி.டி.வி. பதிவு கிடையாது என்று நானே சொன்னேன். அதை ஒத்துக்கொள்வார் என்று அவரது மனதுக்கு தெரியும்.

குழப்பும் ஓ.எஸ்.மணியன்


கேள்வி: ஓ.எஸ்.மணியன் ஒருமுறை, சசிகலாவைகூட ஏற்றுக்கொள்ள தயார். ஆனால், டி.டி.வி.தினகரனைத்தான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னாரே?

பதில்: சும்மா எல்லோரையும் குழப்புவதற்காக அப்படி பேசுகிறார். சசிகலாவை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் அவரை ஜெயிலில் சென்று பார்க்கலாமே?. அவர், தற்போது செயல்பாட்டில் இல்லை என்பதற்காக இதுபோன்று பேசிவருகிறார். அப்படியென்றால், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஏன் நீக்கினார்கள்? எல்லாம், அரசியலுக்கு பேசுகிறார்கள். அ.தி.மு.க.வில் இப்போது எத்தனை பேர் உள்ளனர். ஜெயலலிதா இறந்த பின்னர், 2 அல்லது 3 சதவீதம் பேர் இருந்தாலே பெரியவி‌ஷயம்.

கேள்வி: தங்கதமிழ்ச்செல்வன், 6 பேரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினால் சேரத்தயார் என்று கூறியுள்ளாரே. அந்த 6 பேர் யார் என பட்டியல் கொடுக்க முடியுமா?

பதில்: 6 பேர் அல்ல. 10 அல்லது 12 பேரை நீக்கினால்தான் சேரமுடியும் என்று நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

Next Story