மாவோயிஸ்டு தலைவர் கைது எதிரொலி: மலைக்கிராமத்தில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை


மாவோயிஸ்டு தலைவர் கைது எதிரொலி: மலைக்கிராமத்தில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 10 Oct 2018 4:45 AM IST (Updated: 10 Oct 2018 12:05 AM IST)
t-max-icont-min-icon

தமிழக–கேரள எல்லையில் மாவோயிஸ்டு தலைவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பில்லூர் அணைப்பகுதியில் உள்ள மலைக்கிராமங்களில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தமிழக–கேரள எல்லையான அகழி அருகே வனப்பகுதியில் மாவோயிஸ்டு இயக்க தலைவர்களில் ஒருவரான கோவையை சேர்ந்த டேனிஷ் என்கிற டேனி‌ஷனை (வயது 28) கேரள போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை பாலக்காடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேனிஷ், அந்த இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்ட போது அவர் கோவை மாவட்டத்தை சேர்ந்த மலைக்கிராமங்களில் உள்ள இளைஞர் களை சந்தித்து மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர மூளைச்சலவை செய்ததாக தெரியவந்துள்ளது. எனவே அவர் எந்தெந்த பகுதிகளுக்கு சென்று இளைஞர்களை சந்தித்து பேசினார்? என்பது குறித்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேனிஷ், மாவோயிஸ்டு இயக்க தலைவர்களில் ஒருவராக இருந்துள்ளார். எனவே அவருக்கு கீழ் குறைந்தது 10 பேராவது இருக்க வாய்ப்பு உள்ளது என்றும், போலீசார் அங்கு சென்றதும் அவர்கள் தப்பிச்சென்று இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். எனவே கேரள போலீசார் அகழி, அட்டப்பாடி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

இந்தப்பகுதி தமிழக–கேரள எல்லையில் இருப்பதாலும், அவர்கள் கோவை மாவட்ட வனப்பகுதிக்குள் தப்பி வர வாய்ப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே கோவை மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களில் நேற்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணையை சுற்றி இருக்கும் வேப்பமரத்தூர், சுண்டப்பட்டி, மானார், கோரப்பதி, கீழ் பில்லூர், பில்லூர் அணை, சித்துப்பனை, நீராடி, அத்திக்கடவு ஆகிய பகுதிகளில் நேற்று காலையில் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மலைக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்களை சந்தித்து, சந்தேகத்துக்கு இடமாக யாராவது வந்தார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தினார்கள்.

அதில் அவர்கள், கடந்த ஒரு வாரமாக சந்தேகப்படும்படியாக யாரும் வனப்பகுதியிலேயோ அல்லது மலைக்கிராமங்களுக்கோ வரவில்லை என்றும், அவ்வாறு வந்தால் உடனடியாக தகவல் கொடுக்கிறோம் என்றும் உறுதியளித்தனர். இது குறித்து நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:–

கோவை மாவட்டத்தில் மாவோயிஸ்டு நடமாட்டம் இல்லை. கேரள மாநிலம் அகழிக்கும், பில்லூர் அணை அருகே உள்ள அத்திக்கடவு பகுதிக்கும் குறைந்த தூரம்தான் உண்டு. எனவே சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்ததா? என்பது குறித்து தெளிவு படுத்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் யாரும் வரவில்லை என்பது தெரியவந்துள்ளது.

எனினும் பில்லூர் அணை மற்றும் அதைச்சுற்றி உள்ள மலைக்கிராமங்களில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். அத்துடன் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் அது குறித்து தகவல் கொடுக்க மலைக்கிராமங்களில் உள்ளவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story