கல்லட்டி மலைப்பாதையில் உள்ளூர் டிரைவர்கள் மூலம் வெளியூர் வாகனங்களை இயக்க அனுமதி; கலெக்டருக்கு கோரிக்கை


கல்லட்டி மலைப்பாதையில் உள்ளூர் டிரைவர்கள் மூலம் வெளியூர் வாகனங்களை இயக்க அனுமதி; கலெக்டருக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 10 Oct 2018 4:00 AM IST (Updated: 10 Oct 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

கல்லட்டி மலைப்பாதையில் உள்ளூர் டிரைவர்கள் மூலம் வெளியூர் வாகனங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் கல்லட்டி மலைப்பாதையும் ஒன்று. 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த சாலை மிகவும் செங்குத்தாக இருப்பதால் விபத்துகள் அதிகமாக நடக்கிறது. எனவே அனுபவம் வாய்ந்த உள்ளூர் டிரைவர்களால் மட்டுமே இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடிகிறது. ஆனால் அனுபவம் இல்லாத டிரைவர்கள் இயக்கும்போது விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதுபோன்று கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் விபத்துகளில் 100–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்துகள் தொடர்வதால், கல்லட்டி மலைப்பாதையில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்து உள்ளனர். இதனை கண்காணிக்க தலைகுந்தா பகுதியில் புதுமந்து போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர்.

போலீசாரின் தடை காரணமாக ஊட்டியில் இருந்து மசினகுடி, மாவனல்லா, பொக்காபுரம், வாழைத்தோட்டம், சிங்காரா, மாயார் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக மசினகுடிக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் மசினகுடியில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு வருபவர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் மசினகுடிக்கு வருபவர்கள் அத்திக்கல், ஏக்குணி, கவரட்டி போன்ற குறுக்கு சாலைகள் வழியாக கல்லட்டிக்கு சென்று, அங்கிருந்து மலைப்பாதையில் செல்கின்றனர். இந்த வழியையே பெரும்பாலான சுற்றுலா பயணிகளும் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவும் விபத்துகள் நடந்து வருகிறது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மசினகுடிக்கு வரும் வெளியூர் மக்கள் தங்களுடைய வாகனங்களை அனுபவம் வாய்ந்த உள்ளூர் டிரைவர்கள் மூலம் ஊட்டியில் இருந்து கல்லட்டி மலைப்பாதையில் வர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து மசினகுடி வாகன ஓட்டுநர் சங்க பொருளாளர் சுகீஸ் கூறியதாவது:–

கல்லட்டி மலைப்பாதையில் உள்ளூர் டிரைவர்களால் எந்த விபத்துகளும் இதுவரை நடந்தது இல்லை. மசினகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் டிரைவர் தொழிலை முக்கியமானதாக கொண்டுள்ளனர். தற்போது பொக்காபுரம், சிங்காரா, வாழைத்தோட்டம் பகுதிகளில் செயல்பட்டு வந்த 38 தனியார் தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஏராளமானோர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். எனவே மசினகுடிக்கு வரும் வெளியூர் மக்கள் தங்களுடைய வாகனங்களை அனுபவம் வாய்ந்த உள்ளூர் டிரைவர்கள் மூலம் கல்லட்டி மலைப்பாதையில் இயக்க அனுமதிக்க வேண்டும். இதனால் வேலை இழந்து தவித்து வரும் டிரைவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். அவ்வாறு வாகனங்களை இயக்கி வெளியூர் மக்களை தலைகுந்தாவில் இருந்து மசினகுடி வரை கொண்டு சென்று விடுவதற்கு உள்ளூர் தற்காலிக டிரைவர்களுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும். இவ்வாறான புதிய நடைமுறையை மாவட்ட கலெக்டர் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story