தென் மாவட்டங்களை புறக்கணிக்கும் ரெயில்வே நிர்வாகம்: அகல பாதை ஆன பின்னரும் கூடுதல் ரெயில்களை இயக்க தயக்கம் எம்.பி.க்கள் நடவடிக்கை எடுப்பார்களா?


தென் மாவட்டங்களை புறக்கணிக்கும் ரெயில்வே நிர்வாகம்: அகல பாதை ஆன பின்னரும் கூடுதல் ரெயில்களை இயக்க தயக்கம் எம்.பி.க்கள் நடவடிக்கை எடுப்பார்களா?
x
தினத்தந்தி 10 Oct 2018 4:00 AM IST (Updated: 10 Oct 2018 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்னக ரெயில்வே நிர்வாகம் தென் மாவட்டங்களில் அகல ரெயில் பாதை திட்டப்பணி முடிவடைந்த பின்னரும் கூடுதல் ரெயில்களை இயக்க தயக்கம் காட்டும் நிலை உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க ரெயில்வே அமைச்சகத்திடம் எம்.பி.க்கள் வலியுறுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகரில் இருந்து மானாமதுரைக்கு 110 கிலோ மீட்டர் அகல ரெயில் பாதை திட்டப்பணி ரூ.271 கோடியில் நிறைவேற்றப்பட்டு கடந்த 2013–ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. இதே போன்று கொல்லத்தில் இருந்து விருதுநகர் வரையிலான அகல ரெயில் பாதை பணி தொடங்கப்பட்டது. இதில் செங்கோட்டையில் இருந்து விருதுநகர் வரையிலான அகல ரெயில் பாதை திட்டப்பணி முடிக்கப்பட்ட போதிலும் கொல்லம்–செங்கோட்டை இடையேயான அகல ரெயில் பாதை திட்டப்பணி இந்த ஆண்டுதான் முடிக்கப்பட்டது. அகல ரெயில் பாதை திட்டப்பணி தொடங்குவதற்கு முன்பு மீட்டர் கேஜ் ரெயில் பாதையில் இயக்கப்பட்டு வந்த ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

அகல ரெயில் பாதை திட்டப்பணிகள் முடிவடைந்த பின்னரும் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த ரெயில்களை இயக்குவதற்கு தென்னக ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமல் புறக்கணித்து வருகிறது. அகல ரெயில்பாதை ஆவதற்கு முன்பு கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி வழியாக நாகூருக்கும், ராமேஸ்வரத்துக்கும், மானாமதுரைக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. கொல்லத்தில் இருந்து இதே வழியாக கொல்லம் மெயில் என்ற எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கொலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த எந்த ரெயில்களும் இயக்கப்பட வில்லை. தாம்பரம்–செங்கோட்டை அந்தியோதயா எக்ஸ்பிரசும் இயக்கப்படும் என கடந்த ஆகஸ்ட் மாதமே ரெயில்வே கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு இருந்த போதிலும் அந்த ரெயில் இயக்கத்திலும் தாமதம் ஏற்படுகிறது.

விருதுநகர்–மானாமதுரை அகல ரெயில்பாதை திட்டப்பணிகள் முடிவடைந்த பின்னர் அந்த ரெயில்பாதையில் புதுச்சேரி–நாகர்கோவில், சென்னை–செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் ஆகிய வாராந்திர ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. விருதுநகர்–காரைக்குடி வரை பயணிகள் ரெயில் மட்டும் இயக்கப்படுகிறது. பெரும் பொருட் செலவில் அமைக்கப்பட்டுள்ள விருதுநகர்–மானாமதுரை அகல ரெயில் பாதையில் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டால் தான் விருதுநகர் மாவட்டத்தின் கிழக்குபகுதியில் உள்ள மக்கள் பயன் அடைவார்கள். தற்போது உள்ள நிலையில் அவர்கள் பெங்களூர், கோவை, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்ல விருதுநகருக்கு தான் வர வேண்டி உள்ளது.

தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திய போது இருவழி ரெயில்பாதை அமைக்கப்பட்ட பின்பு தான் அதற்கு சாத்தியப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து விருதுநகர்–வாஞ்சிமணியாச்சி, வாஞ்சிமணியாச்சி–நெல்லை, நெல்லை–நாகர்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையே அகல ரெயில்பாதை அமைக்க மதிப்பீடு தயாரிக்கப்பட்டு 2021–ம் ஆண்டுக்குள் திட்டப்பணி முடிக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்த போதிலும் நீதி ஒதுக்கீட்டில் தாராளம் காட்டப்படாததால் பணிகள் முழு வீச்சில் நடைபெற வில்லை.

இதேபோன்று மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரையிலான அகல ரெயில் பாதை திட்டப்பணிக்கும் முழுமையாக நிலம் கையகப்படுத்துவதற்கு கூட இன்னும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாத நிலை இருப்பாக கூறப்படுகிறது. இந்த அகல ரெயில்பாதை பணி விரைந்து முடித்தால் மதுரை–நெல்லை இடையேயான ரெயில் பாதையில் ரெயில்போக்குவரத்து நெருக்கடி குறைந்து கூடுதல் ரெயில்கள் இயக்கவும், பயண நேரம் குறையவும் வாய்ப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

சமீபத்தில் மதுரையில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி.க்களின் கருத்துக்கள் ஏதும் முறையாக பரிசீலிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் பெயரளவில் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே தென் மாவட்ட எம்.பி.க்கள், தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்களை இயக்கவும், தென் மாவட்ட ரெயில்வே திட்டப்பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்யவும் ரெயில்வே அமைச்சகத்திடமும், மத்திய நிதி மந்திரியிடமும் வலியுறுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது. ரெயில்வே அமைச்சம் கேரள மாநிலத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அதனை ஒட்டி உள்ள தென் மாவட்டங்களுக்கும் பெற்று தரும் வகையில் தென்மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் செயல்பட வேண்டியது அவசியம் ஆகும்.


Next Story