சிலை பதுக்கல் தொடர்பாக விளக்கம் அளிக்க சம்மன்: ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆஜராகவில்லை 11 பேரின் மனுக்கள் நிராகரிப்பு


சிலை பதுக்கல் தொடர்பாக விளக்கம் அளிக்க சம்மன்: ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆஜராகவில்லை 11 பேரின் மனுக்கள் நிராகரிப்பு
x
தினத்தந்தி 9 Oct 2018 11:15 PM GMT (Updated: 9 Oct 2018 6:52 PM GMT)

சிலை பதுக்கல் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என ரன்வீர்ஷா, கிரண்ராவ் உள்பட 14 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் ஒருவர் மட்டுமே ஆஜரானார். ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆகியோர் ஆஜராகவில்லை. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 11 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

கும்பகோணம்,

குஜராத் மாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர் ரன்வீர்ஷா. இவர் சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் வசித்து வருகிறார். இவரிடம் பழமையான சிலைகளை விற்பனை செய்ததாக சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன், போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார். அதன்படி சென்னையில் உள்ள ரன்வீர்ஷா வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பழமையான சிலைகள், தூண்கள், உலோக சிலைகள் உள்ளிட்ட 267 பழமையான கலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

அதேபோல ரன்வீர்ஷாவின் தோழியான சென்னை ராயப்பேட்டை கஸ்தூரி எஸ்டேட்டை சேர்ந்த கிரண்ராவ் என்பவருடைய வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். இதில் 23 கற்சிலைகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

பழமையான சிலைகளை பதுக்கி வைத்தது தொடர்பாக தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் 9-ந் தேதி(நேற்று) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ரன்வீர்ஷா, கிரண்ராவ் மற்றும் அவர் களுடைய பணியாளர்கள் செந்தில் விநாயகம், ரஞ்சித் சன்வால், அருண் கிறிஸ்டி, ராஜேஷ், அஜி, தயாநிதி ஸ்வைன், பிரகாஷ், சிவா, தேவேந்திரன், சதீஷ், ராஜிவ்தேவ், நரேன் உள்ளிட்ட 14 பேருக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சம்மன் அனுப்பினர்.

இதையொட்டி கும்பகோணத்தில் உள்ள நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகமாக மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இங்கு நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் மற்றும் போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நரேன் என்பவர் மட்டும் ஆஜரானார். ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆகியோர் ஆஜராகவில்லை. மீதம் உள்ள 11 பேர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் சரவணன், செல்வம் ஆகியோர் கும்பகோணம் அலுவலகம் தொலைவில் இருப்பதால், சென்னையில் வைத்து விசாரித்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கூறி போலீசாரிடம் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் மற்றும் போலீசார் நிராகரித்து கும்பகோணம் அலுவலகத்தில் தான் நேரில் ஆஜராக வேண்டும் என கூறி வக்கீல்களை திருப்பி அனுப்பி விட்டனர். ஆஜரான நரேனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியாதவது:-

சென்னையில் ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆகியோருடைய வீட்டில் பழமையான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து அவர்கள் உள்பட 14 பேரிடம் விசாரணை நடத்துவதற்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர்கள் கும்பகோணம் அலுவலகத்தில் தான் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மனில் குறிப்பிட்டுள்ளோம்.

ஆனால் சிலர் கும்பகோணம் வரமுடியவில்லை என வக்கீல்கள் மூலம் மனு அளித்தனர். அந்த மனுவை நாங்கள் நிராகரித்து விட்டோம். இன்று(நேற்று) வர முடியாதவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும். இதில் நரேன் என்பவர் ஆஜராகி உள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story