‘குழந்தைகளுக்கு தமிழில் பேச கற்றுக் கொடுங்கள்’ ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் வேண்டுகோள்


‘குழந்தைகளுக்கு தமிழில் பேச கற்றுக் கொடுங்கள்’ ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 10 Oct 2018 4:00 AM IST (Updated: 10 Oct 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

‘குழந்தைகளுக்கு தமிழில் பேச கற்றுக் கொடுங்கள்’என காரைக்குடியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காரைக்குடி,

காரைக்குடியில் வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் சார்பில் வீறுகவியரசர் விருது வழங்கும் விழா, போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, அவைக்கள பாராட்டு பட்டயங்கள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. செந்தமிழ் பாவை வரவேற்றார். சேது.குமணன், கொங்குவேள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் பாரி முடியரசன் அறிமுக உரையாற்றினார். புதுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ. கவிதைப்பித்தன் தொடக்கவுரை ஆற்றினார்.

விழாவில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வீறுகவியரசர் முடியரசனார் விருதுகள், மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் அவைக்கள பாராட்டு பட்டயங்கள், அவைக்கள நன்றி நல்கை விருது உள்ளிட்டவை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–

பெரும்பாலும் அரசுப்பள்ளி விழாக்களுக்கு சென்று, அங்குள்ள மாணவர்களோடு தான் கலந்துரையாடல் செய்வேன். காரணம் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகள் தான் நம் தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நிலையில் இருக்கிறார்கள். ஆனால் இன்று அதிக குழந்தைகள் ஆங்கில வழிக்கல்விக்கு செல்வதை வருத்தத்தோடு பார்க்கிறேன். குழந்தைகளுக்கு பெற்றோர் தமிழில் பெயர் வையுங்கள். குழந்தைகளிடம் ஆங்கிலம் தவிர்த்து அழகிய தமிழில் பேச கற்றுக்கொடுங்கள். இந்த தேசத்தின் ஆட்சி மொழியாக எதை வைக்க வேண்டும் என என்னிடம் ஐ.ஏ.எஸ். நேர்முக தேர்வில் கேள்வி கேட்டபோது கொஞ்சம் கூட தயங்காமல் பழம் பெருமை உடைய தமிழை வையுங்கள் என்றேன். அரசியல் தலைவர்கள், நிர்வாகம் சரியாக இருந்தால் போதாது. சமூகத்தில் உள்ள அனைத்து அங்கங்களும் நேர்மையாக இருந்தால் மட்டுமே நேர்மையான நிர்வாகத்தை தரமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா வாழ்த்துரை வழங்கினார். முடியரசனாரின் பூங்கொடி புரட்சி குறித்து சபரிமாலா எடுத்துரைத்தார். தமிழ் முடியரசன் விழாவை தொகுத்து வழங்கினார். விழாவில் வீறுகவியரசர் முடியரசனார் விருது புலவர் நெடுஞ்சேரலாதன், நாவை சிவம், கவிஞர்கள் முத்தரசன், இனியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.


Next Story