விழுப்புரத்தில் புதிய ரெயில்வே மேம்பாலம் விரைவில் திறக்கப்படும் கலெக்டர் தகவல்


விழுப்புரத்தில் புதிய ரெயில்வே மேம்பாலம் விரைவில் திறக்கப்படும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 9 Oct 2018 9:30 PM GMT (Updated: 9 Oct 2018 6:59 PM GMT)

விழுப்புரத்தில் புதிய ரெயில்வே மேம்பாலம் விரைவில் திறக்கப்படும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் கூறினார்.

விழுப்புரம், 

விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய ரெயில்வே கேட்டாக காட்பாடி மார்க்கம் செல்லும் ரெயில்வேகேட் அமைந்துள்ளது. இந்த ரெயில்வேகேட் வழியாக ரெயில்கள் செல்லும்போது கேட் மூடப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் விழுப்புரம் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, இங்குள்ள ரெயில்வேகேட்டில் மேம்பாலம் அமைக்க ரூ.34 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கி உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த ரெயில்வேகேட் மூடப்பட்டு மேம்பாலம் அமைப்பதற்காக மண் மாதிரி சோதனைகள் செய்யப்பட்டு மேம்பால பணிகள் தொடங்கியது.

இந்த பணிகள் 2 வருட காலத்தில் அதாவது கடந்த 2016 நவம்பர் மாதத்தில் முடிப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் பணிகள் மிகவும் தொய்வாகவும், மந்தமாகவும் நடந்து வந்தது. ஒப்பந்த காலம் முடிந்து 1¾ ஆண்டுகள் கழித்த நிலையில் தற்போதுதான் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்த பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடையும் என தெரிகிறது. இதனிடையே மேம்பாலத்தை திறப்பதற்கு முன்பாக தற்காலிகமாக பணிகள் நடைபெறாத நேரங்களில் அந்த மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது இந்த மேம்பாலத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் எளிதாக விழுப்புரம் நகருக்குள் வந்து செல்கின்றனர்.
இதுகுறித்து கலெக்டர் சுப்பிரமணியன், நிருபர்களிடம் கூறுகையில், ரெயில்வே மேம்பாலத்துக்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. முழுவதுமாக பணிகளை நிறைவு செய்ய துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்துள்ளதால் மேம்பால சாலைகள் உறுதித்தன்மை பெறுவதற்காக தற்காலிகமாக இருசக்கர வாகனங்கள் சென்று வர மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலத்தை திறக்க முதல்-அமைச்சரிடம் தேதி கேட்டுள்ளோம். அவர் தேதி கொடுத்த பின்னர் அனைத்து வாகனங்களும் சென்றுவர ஏதுவாக விரைவில் மேம்பாலம் திறக்கப்படும் என்றார்.

Next Story