‘எய்ம்ஸ்’ அறிவிப்பை அரசிதழில் வெளியிடக்கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரை ஐகோர்ட்டில் மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதால் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015–ம் ஆண்டு பிப்ரவரி மாதமே மத்திய அரசு அறிவித்தது.
ஆனால் எந்த இடத்தில் அமைய உள்ளது என்பதை 3 ஆண்டுகள் கழித்து அறிவித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டவுடன், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. ஆனால் மதுரை தோப்பூரில் இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. எனவே தமிழகத்தில் தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்று அரசிதழில் மத்திய அரசு வெளியிட வேண்டும்.
மேலும் அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற வேண்டும், கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தத்தை விரைவுபடுத்தவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனு குறித்து மத்திய–மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 29–ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.