சேலம் அருகே 2-வது முறை விற்கப்பட்ட பெண் குழந்தை மீட்பு போலீசார் தீவிர விசாரணை


சேலம் அருகே 2-வது முறை விற்கப்பட்ட பெண் குழந்தை மீட்பு போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 10 Oct 2018 4:00 AM IST (Updated: 10 Oct 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே 2-வது முறையாக விற்கப்பட்ட பெண் குழந்தை மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

மேச்சேரி,

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள புதுச்சாம்பள்ளியை சேர்ந்தவர் பாலு(வயது 50). லாரி டிரைவர். இவர் மேச்சேரி நெசவாளர் காலனியை சேர்ந்த ஓபுராணி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். ஓபுராணிக்கு ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணம் நடந்து 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ஓபுராணிக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தையை அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் மூலம் ஈரோட்டை சேர்ந்த ஒருவருக்கு ஓபுராணி விற்று விட்டதாக தெரிகிறது. இது குறித்து தகவல்கள் வெளியானதால் குழந்தையை வாங்கியவர் போலீசுக்கு பயந்து அந்த பெண் குழந்தையை ஓபுராணியிடம் கொண்டு வந்து கொடுத்து விட்டார்.

இந்த நிலையில் நெசவாளர் காலனியில் தனது தாய் வீட்டில் இருந்த ஓபுராணி மீண்டும் அந்த பெண் குழந்தையை 2-வது முறையாக யாரிடமோ பணத்துக்கு விற்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது கணவர் பாலு சேலம் கலெக்டர் ரோகிணியிடமும், குழந்தைகள் நல அலுவலரிடமும் புகார் செய்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மேச்சேரி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து மேச்சேரி போலீசார் குழந்தையை விற்றது தொடர்பாக ஓபுராணியிடமும் அவரது உறவினர்களிடமும் விசாரணை நடத்தினார்கள். குழந்தையை வாங்கியவர்களை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே அந்த பெண் குழந்தை ஈரோட்டில் இருப்பது தெரிய வந்தது.

போலீசார் தேடுவதை அறிந்த குழந்தையை வாங்கியவர் நேற்று முன்தினம் மேச்சேரி பஸ் நிலையத்தில் ஓபுராணியின் தங்கை கலைவாணியிடம் பெண் குழந்தையை ஒப்படைத்து விட்டு சென்று விட்டார். கலைவாணி அந்த குழந்தையை அக்காள் ஓபுராணியிடம் ஒப்படைத்தார். இந்த நிலையில் விற்கப்பட்ட குழந்தை தாயிடம் இருப்பதை அறிந்த மேச்சேரி போலீசார் அங்கு சென்று குழந்தையை மீட்டனர். குழந்தை சோர்வடைந்த நிலையில் இருந்ததை அறிந்து சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மீட்கப்பட்ட அந்த பெண் குழந்தையையும், தாய் ஓபுராணி, கலைவாணி ஆகியோரை மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு அவர்களை சேலத்திற்கு அழைத்து சென்றனர். பெண் குழந்தையை சேலத்தில் மாவட்ட குழந்தைகள் நல குழும தலைவர் சேவியரிடம் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் அவர் அந்த பெண் குழந்தையை சின்னதிருப்பதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தார்.

Next Story