திண்டுக்கல்லில் பரபரப்பு: பெண் சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய பிரபல ரவுடி கைது
திண்டுக்கல்லில், பெண் சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய பிரபல ரவுடியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கிழக்கு மரியநாதபுரத்தை சேர்ந்த மகாலிங்கம் மகன் சுரேஷ் (வயது 38). இவர், நாகல்நகரில் உள்ள ஒரு மதுபான பாரில் வேலைபார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த மதுபான பாருக்கு பாரதிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி கணேசன் என்ற நரைமுடி கணேசன் (40) வந்தார். பின்னர், அங்கிருந்த சுரேசிடம் மாதம் ரூ.25 ஆயிரம் மாமூலாக தர வேண்டும் என்று மிரட்டினார்.
ஆனால், அவர் தர மறுக்கவே பையில் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்து கொண்டு கணேசன் தப்பி ஓடிவிட்டார். இதுதொடர்பாக, சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை தேடி வந்தனர். இந்தநிலையில், நேற்று காலை 7 மணியளவில், தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி மற்றும் போலீசார் பாரதிபுரம் வரதராஜா பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த கணேசனை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர், விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல முயன்றனர். அந்தநேரத்தில், திடீரென கணேசன் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வியை சுட்டு கொன்றுவிடுவதாக மிரட்டினார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் இருந்த துப்பாக்கியை போராடி பறித்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர், கணேசனை வேனில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணையை தொடங்கினர்.
பிரபல ரவுடியான கணேசன் மீது திண்டுக்கல் தெற்கு, தாலுகா போலீஸ் நிலையங்களில் 2 கொலை வழக்குகளும், வழிப்பறி, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவர், பிரபல ரவுடியான மோகன்ராமின் நெருங்கிய கூட்டாளி ஆவார். அவருக்கு தெற்கு போலீஸ் நிலையத்தில் ரவுடி சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, பாரதிபுரத்தில் உள்ள அவருடைய வீட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அங்கு உரிமம் இல்லாத இரண்டு கைத்துப்பாக்கிகளும், 56 தோட்டாக்களும் இருந்தன. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். பின்னர் திண்டுக்கல் 3-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு தீபா முன்னிலையில் கணேசனை ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய ரவுடி கைது செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story