நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்; அரசு முதன்மை செயலாளர் அறிவுறுத்தல்


நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்; அரசு முதன்மை செயலாளர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 9 Oct 2018 11:15 PM GMT (Updated: 9 Oct 2018 7:49 PM GMT)

நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று அரசு முதன்மை செயலாளர் கோபால் அறிவுறுத்தியுள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார். அரசு முதன்மை செயலாளர் (கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம்) கோபால் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகம் முழுவதும் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகளவில் மழை பெய்து வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதியை செய்து கொடுக்க வேண்டும். சுகாதாரத்துறையினர் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 108 ஆம்புலன்சு சேவைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுப்பணித்துறையினர் குடிமராமத்து பணிகளை முறையாக மேற்கொள்ளவும், ஆறுகள் மற்றும் குளங்களின் கரைகள் நல்ல நிலையில் உள்ளதா? என்று சோதனை செய்து கண்காணிக்க வேண்டும். கரைகள் பாதிக்கப்பட்டால் அதை சீர்செய்ய மணல் மூடைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளில் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்தால் அவற்றை உடனடியாக அகற்ற தேவையான எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மேலும், மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், தாசில்தார்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கள் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், தாழ்வான பகுதிகளை கண்டறிந்து மழை குறித்து முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மாவட்டங்களில் தன்னார்வலர்களுடன் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

மழையினால் ஏற்படும் பயிர் சேதம் குறித்து வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு மழைபாதிப்பு குறித்து வரும் அழைப்புகளை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். நொய்யல் உள்பட நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு திருப்பூர் மாவட்டத்தை வடகிழக்கு பருவமழை பாதிப்பில் இருந்து முழுமையாக பாதுகாத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தினையும் முதன்மை செயலாளர் பார்வையிட்டார். இதன் பின்னர் திருப்பூர் மாநகராட்சி 50–வது வார்டு, முத்தையன் கோவில் பாலம், தெற்கு தோட்டம், பல்லடம் ஊராட்சி ஒன்றியம் மங்கலம் சாலை, 63 வேலம்பாளையம் ஊராட்சியில் சாலையின் நடுவில் அமைந்துள்ள சிறுபாலம், பணிக்கம்பட்டி ஊராட்சி, பாலசமுத்திரம் மேட்டுத்தோட்டம் அருகில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.56 லட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பணை உள்பட பல்வேறு பகுதிகளையும் அரசு முதன்மை செயலாளர் கோபால் ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன், போலீஸ் கமி‌ஷனர் மனோகரன், மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, சப்–கலெக்டர்கள் ஷ்ரவன்குமார் (திருப்பூர்), கிரேஷ் பச்சாவு (தாராபுரம்), மாநகராட்சி ஆணையர் சிவகுமார், உதவி இயக்குனர் ஊராட்சிகள் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story