பிறந்து 2 மணி நேரத்தில் ஓடையில் வீசிய கொடூரம்: பெற்றெடுத்த தாய் எனக்கூறி குழந்தையை கேட்கும் பெண் போலீசார் விசாரணை
வேடசந்தூர் அருகே பிறந்து 2 மணி நேரத்தில் ஓடையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை, பெற்றெடுத்த தாய் எனக்கூறி கேட்டு வந்த பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேடசந்தூர்,
வேடசந்தூர் அருகே சின்னழகநாயக்கனூரில் ஓடையில் நேற்று முன்தினம் ஒரு பச்சிளம் பெண் குழந்தை அழுதபடி கிடந்தது. பிறந்து 2 மணி நேரத்திலேயே அந்த குழந்தை ஓடையில் வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் குழந்தையை மீட்டு கோவிலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் குழந்தையை ஓடையில் வீசிச் சென்ற நபர் குறித்து எரியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று ஒரு பெண், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்தார். மேலும் சின்னழகநாயக்கனூர் ஓடையில் கிடந்த குழந்தை தனக்கு பிறந்தது என்றும், குழந்தையை கொடுக்கும்படியும் கேட்டார். இதையடுத்து மருத்துவமனை செவிலியர்கள், அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அதில், அந்த பெண் சின்னழகநாயக்கனூரை சேர்ந்த ஜோதி (வயது 32) என்பது தெரியவந்தது.
மேலும், அவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் ராயனூரை சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் நீண்டநாட்களுக்கு பின் கர்ப்பமான அவருக்கு, நேற்று முன்தினம் சின்னழகநாயக்கனூரில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதுவே ஓடையில் வீசப்பட்ட குழந்தை என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், பெண் குழந்தையை ஓடையில் வீசியது யார்? எதற்காக வீசப்பட்டது என்று தெரிவிக்கவில்லை. இதனால் செவிலியர்கள் குழந்தையை அவரிடம் ஒப்படைக்கவில்லை. இது தொடர்பாக எரியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story