மருதாநதி அணை நீர்மட்டம் உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
அய்யம்பாளையம் மருதாநதி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பட்டிவீரன்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் மருதாநதி அணை உள்ளது. இதன் மொத்த உயரம் 72 அடியாகும். இந்த அணைக்கு தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பாச்சலூர் மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் வரட்டாறு உள்பட 10 ஆறுகள் மூலம் தண்ணீர் வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 வாரங்களாக மலைப்பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 49 அடியாக உயர்ந்தது. மேலும் அணைக்கு 95 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் தொடர்ந்து மழை பெய்தால் விரைவில், அணை முழு கொள்ளளவை எட்டி விடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த அணை தண்ணீர் மூலமாக நிலக்கோட்டை, ஆத்தூர் தாலுகாக்களில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேநேரம் அணைக்கு வரும் தண்ணீரை சிலர் மோட்டார்கள் வைத்து திருட்டுத்தனமாக உறிஞ்சி எடுப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story