தாமதமாக வந்தால் நடவடிக்கை: பொதுப்பணித்துறையின் வேலைகளை துரிதப்படுத்துங்கள் - நாராயணசாமி அதிரடி உத்தரவு


தாமதமாக வந்தால் நடவடிக்கை: பொதுப்பணித்துறையின் வேலைகளை துரிதப்படுத்துங்கள் - நாராயணசாமி அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 10 Oct 2018 5:00 AM IST (Updated: 10 Oct 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

பொதுப்பணித்துறையின் வேலைகளை துரிதப்படுத்தவும், தாமதமாக வரும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முதல்–அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.

புதுச்சேரி,

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் நேற்று பிற்பகலில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒவ்வொரு பிரிவாக சென்று அங்கு பணிக்கு வந்துள்ள ஊழியர்கள் குறித்து விசாரித்தனர்.

பின்னர் கருத்தரங்க அறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம் உள்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

ஆய்வு முடிந்ததும் முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

பொதுப்பணித்துறையின் செயல்பாடு குறித்து தற்போது ஆய்வு நடத்தப்பட்டது. ஏற்கனவே அமைச்சர் பலமுறை ஆய்வு நடத்தி உள்ளார். பொதுப்பணித்துறையின் கட்டிடம், சாலை, குடிநீர் வினியோகம், கால்வாய் பராமரிப்பு போன்றவற்றின் செயல்பாடுகளை துரிதப்படுத்த கூறியுள்ளோம்.

கால்வாய்கள் தூர்வாரும் பணி துரிதமாக நடைபெற வேண்டும் என்று கூறியுள்ளோம். நிதித்துறை விதிமுறைகளை தளர்த்தி பணிகள் வேகமாக நடக்க உதவிடவேண்டும் என்று தலைமை பொறியாளரும் கேட்டுள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளாக இந்த துறையில் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கும்போது மத்திய தேர்வாணையத்தில் அனுமதி பெற்று வழங்குவதால் காலதாமதமாகிறது. பதவி உயர்வுகளை விரைந்து வழங்க உத்தரவிட்டுள்ளோம்.

நிதித்துறையில் இருந்து பொதுப்பணித்துறைக்கு நிதிகளை பெற பல விதிமுறைகள் உள்ளது. அந்த விதிமுறைகளை தளர்த்திட நடவடிக்கை எடுக்க கேட்டுள்ளேன். எந்தெந்த வேலைகளை உடனடியாக செய்ய வேண்டும் என்று பொதுப்பணித்துறை முடிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

துறை அதிகாரிகள், ஊழியர்கள் காலத்தோடு பணிக்கு வரவேண்டும். அவ்வாறு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூறியுள்ளேன்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.


Next Story