ஒரே நேரத்தில் போலீசார் அதிரடி: புதுவையில் சொகுசு பங்களா, ஓட்டலில் விபசாரம் புரோக்கர்கள் உள்பட 9 பேர் கைது


ஒரே நேரத்தில் போலீசார் அதிரடி: புதுவையில் சொகுசு பங்களா, ஓட்டலில் விபசாரம் புரோக்கர்கள் உள்பட 9 பேர் கைது
x
தினத்தந்தி 9 Oct 2018 11:15 PM GMT (Updated: 9 Oct 2018 8:31 PM GMT)

புதுவையில் சொகுசு பங்களா, ஓட்டல், மசாஜ் சென்டர்களில் ஒரே நேரத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி அங்கு விபசாரம் நடத்திய புரோக்கர்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர். 8 அழகிகளை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

புதுச்சேரி,

புதுவைக்கு தினந்தோறும் வெளிமாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களை குறி வைத்து விபசார தொழில் நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. சொகுசு பங்களா, ஓட்டல்களிலும், மசாஜ் சென்டர்களிலும் விபசாரம் நடப்பதாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தாவிற்கு புகார்கள் வந்தன.

இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்–இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து சாதாரண உடை அணிந்து புதுவை முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பது தெரியவந்தது. உடனே போலீசார் சாதாரண உடையில் அங்கு வாடிக்கையாளர்களை போல் சென்றனர். அப்போது அங்கு இருந்த புரோக்கர்கள் 2 பேர் அவர்களுக்கு விபசார அழகிகளை அறிமுகப்படுத்தி வைத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

இதில் நோணாங்குப்பம் பகுதியை சேர்ந்த முருகதாஸ்(வயது 40), வி.பி.சிங் நகர் பாரதிதாசன் தெருவை சேர்ந்த சந்தோஷ்(30) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அங்கு இருந்த 6 விபசார அழகிகளை மீட்டனர். இது தொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அங்கு ஆண்களுக்கு மசாஜ் செய்வது போல் பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதேபோல் வில்லியனூர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் சிறப்பு அதிரடிப்படை போலீசார், ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அங்குள்ள 3–வது மாடியில் ஒரு அறையில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு இருந்த மரக்காணம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு அனிச்சங்குப்பம் பகுதியை சேர்ந்த கஜேந்திரன்(30), கடலூர் மாவட்டம் குமாரட்சி வெண்ணையூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(47), ஓட்டல் மேலாளர் முதலியார்பேட்டை தேவநாத் என்கிற தேவ்(24), பாலா(40) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அங்கு இருந்த ஒரு விபசார அழகி மீட்கப்பட்டார். இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெட்டியார்பாளையம் கம்பன் நகரில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் விபசாரம் நடப்பதாக தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்றனர். வாடிக்கையாளர்கள் போல் அங்கு இருந்த புரோக்கர்கள் 3 பேர் போலீசாரிடம் அழகிகள் குறித்து பேசினர். இதில் அங்கு விபசாரம் நடப்பதை உறுதி செய்து கொண்டு அதிரடியாக சோதனை நடத்தினர்.

அங்கு இருந்த முதலியார்பேட்டை திருப்பூர் குமரன் நகரைச் சேர்ந்த ராஜேந்திரகுமார் என்கிற ராஜேந்திரன் (37), கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த விஜயன்(31), உருளையன்பேட்டையை சேர்ந்த அமீர்ஜான் என்கிற ஜான்(42) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இங்கு இருந்த வடமாநிலத்தை சேர்ந்த விபசார அழகி ஒருவரை மீட்டனர். இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரேநேரத்தில் 3 இடங்களில் நடந்த இந்த அதிரடி சோதனையில் புரோக்கர்கள் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டனர். அழகிகள் 8 பேர் மீட்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சோதனை நடந்த இடங்களில் இருந்து செல்போன்கள், காண்டம், மோட்டார் சைக்கிள் மற்றும் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான புரோக்கர்கள் 9 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

புதுவையில் போலீசார் நடத்திய சோதனையில் விபசாரத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு இருந்து 8 விபசார அழகிகளை மீட்டனர். இது தொடர்பான தகவல்களை தெரிவிக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மாலை பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் குற்றவாளிகளை புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பத்திரிகையாளர் சந்திப்பு முடிவதற்கு முன்பே புகைப்படம் எடுக்க அனுமதிக்காமல் குற்றவாளிகளில் 7 பேரை போலீஸ் வேனில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்று விட்டனர். 2 பேரை மட்டுமே புகைப்படம் எடுக்க அனுமதித்தனர்.


Next Story