தகராறை விலக்கிய போது கட்டையால் தாக்கப்பட்ட தொழிலாளி பரிதாப சாவு கொலை வழக்காக மாற்றி விசாரணை


தகராறை விலக்கிய போது கட்டையால் தாக்கப்பட்ட தொழிலாளி பரிதாப சாவு கொலை வழக்காக மாற்றி விசாரணை
x
தினத்தந்தி 10 Oct 2018 4:00 AM IST (Updated: 10 Oct 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

பாப்பாரப்பட்டி அருகே பக்கத்து வீட்டுக்காரரின் தகராறை விலக்கிய போது கட்டையால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மேல் எண்டப்பட்டியை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மகன் ராஜ்குமார் (வயது25). இவருடைய மனைவி பானுமதி. கடந்த 2–ந்தேதி ராஜ்குமாருக்கும், இவருடைய மனைவி பானுமதிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதை ராஜ்குமாரின் அண்ணன் பெருமாள் விலக்கினார். இதனால் ராஜ்குமார், அண்ணனிடம் தகராறு செய்தார்.

அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த தொழிலாளி வெங்கடாசலம் (50) என்பவர் அங்கு சென்று தகராறை விலக்கினார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் கட்டையால் வெங்கடாசலத்தை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வெங்கடாசலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக வெங்கடாசலத்தின் மனைவி முனியம்மாள் பாப்பாரப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வெங்கடாசலம் நேற்று பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பாப்பாரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் அடி தடி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story