தர்மபுரியில் அரசு கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு கல்லூரி ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி அரசு கலைக்கல்லூரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழகத்தின் கிளை தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அரசு கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் பெருமாள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். கிராமப்புற பகுதிகளில் உள்ள அரசு கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய கல்லூரிகளில் விரைவில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தர ஊதியம் பெறுவதற்கான அரசாணை 102–ல் திருத்தம் செய்ய வேண்டும்.
1.1.2016 முதல் எம்.பில்., பி.எச்.டி. முடித்தவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் நெறிமுறைகள் 2018–ல் அனுமதிக்கப்பட்டுள்ள ஊக்க ஊதிய உயர்வை வழங்க வேண்டும். தர ஊதியம் வழங்கியதில் உள்ள நிலுவைத்தொகையை அளிக்க வேண்டும். 2015–ம் ஆண்டு பணியில் சேர்ந்த கல்லூரி ஆசிரியர்களுக்கு முழு தகுதிச்சான்று, பணிவரன்முறை ஆணை, தகுதிகாண் பருவம் முடித்ததற்கான ஆணை ஆகியவற்றை வழங்க வேண்டும்.
கல்லூரி ஆசிரியர்கள், விரிவுரையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கழக மண்டல தலைவர் முருகன் நன்றி கூறினார்.