நாமக்கல்லில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பணி கலெக்டர் நேரில் ஆய்வு


நாமக்கல்லில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பணி கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 10 Oct 2018 4:15 AM IST (Updated: 10 Oct 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் விழிப்புணர்வு பணியை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் ஆய்வு செய்தார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் உருவாகாமல் தடுக்கும் வகையில் உள்ளாட்சி, ஊரக வளர்ச்சித்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

குடிதண்ணீர் பிடிக்கும் பாத்திரங்களை மூடி பயன்படுத்தவும், பயன்படுத்தாமல் உள்ள பொருட்களில் தண்ணீர் தேங்காமல் தடுக்கவும், வீடுகளின் மேற்பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் சுத்தம் செய்யவும் வீடு,வீடாக சென்று அறிவுறுத்தப்படுகின்றது.

இந்த பணிகளை மாவட்ட அளவிலான உயர் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று நாமக்கல்லில் உள்ள சேந்தமங்கலம் சாலை, எம்.ஜி.ஆர். நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களில் கொசுப்புழுக்கள் ஏதேனும் இருக்கின்றனவா? என்றும், முறையாக மூடி பயன்படுத்தப்படுகின்றனவா? என்றும், குப்பைகள் அகற்றப்பட்டு இருக்கின்றதா? என்றும் நேரில் பார்வையிட்டார். மேலும் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள் குறித்து குடியிருப்புகளில் உள்ள பெண்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Next Story