ரெயில்வே அணிகளுக்கான அகில இந்திய செஸ் போட்டி: சென்னை ஐ.சி.எப். அணி சாம்பியன்


ரெயில்வே அணிகளுக்கான அகில இந்திய செஸ் போட்டி: சென்னை ஐ.சி.எப். அணி சாம்பியன்
x
தினத்தந்தி 10 Oct 2018 4:15 AM IST (Updated: 10 Oct 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே அணிகளுக்கு இடையே நடந்த அகில இந்திய செஸ் போட்டியில் சென்னை ஐ.சி.எப். அணி சாம்பியன் ஆனது.

திருச்சி,

தெற்கு ரெயில்வே விளையாட்டு சங்கம் சார்பில் 31-வது ஆண்டாக அகில இந்திய அளவில் ரெயில்வே அணிகளுக்கு இடையேயான செஸ் போட்டி திருச்சி மண்டல ரெயில்வே பயிற்சி பள்ளியில் கடந்த 3-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வந்தது. செஸ் போட்டியில் 5 கிராண்ட் மாஸ்டர்கள், 18 இன்டர்நேஷனல் மாஸ்டர்கள் மற்றும் வீராங்கனைகள் என 14 ரெயில்வே மண்டலங்களில் இருந்து 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

போட்டிகள் குழு மற்றும் தனிநபர் போட்டி என 2 பிரிவுகளாக நடந்தது. குழு போட்டியில் சென்னை ஐ.சி.எப். கிழக்கு ரெயில்வே, மேற்கு ரெயில்வே, தெற்கு-மேற்கு ரெயில்வே, வடக்கு ரெயில்வே, தெற்கு மத்திய ரெயில்வே, தெற்கு ரெயில்வே, தெற்கு-கிழக்கு ரெயில்வே, தென்கிழக்கு மத்திய ரெயில்வே, வடமேற்கு ரெயில்வே, கொல்கத்தா மெட்ரோ, மேற்கு மத்திய ரெயில்வே, ரெயில் பெட்டி தொழிற்சாலை என 14 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. தனிநபர் பிரிவில் 82 பேர் பங்கேற்று விளையாடினர். குழு போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் 6 சுற்றுகள் நடத்தப்பட்டன. இதில் தொடக்கம் முதலே சென்னை ஐ.சி.எப். அணி அதிக புள்ளிகள் எடுத்து முன்னிலை வகித்தது.

இந்தநிலையில் நேற்று காலை இறுதிப்போட்டியும், பிற்பகலில் பரிசளிப்பு விழாவும் நடந்தது. இறுதியாக 18 புள்ளிகள் பெற்று சென்னை ஐ.சி.எப். அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் பி.கே.மிஷ்ரா கலந்துகொண்டு ஐ.சி.எப். அணிக்கு தங்கப்பதக்கம் மற்றும் சுழற்கோப்பையை பரிசாக வழங்கினார்.

16.5 புள்ளிகள் எடுத்து 2-வது இடத்தை பிடித்த கிழக்கு ரெயில்வே அணிக்கு, வெள்ளிப்பதக்கம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. 3-வது இடத்தை 14 புள்ளிகள் பெற்ற மேற்கு ரெயில்வே அணி பிடித்தது. அந்த அணிக்கு வெண்கலப்பதக்கமும், கேடயமும் பரிசாக வழங்கப்பட்டது.

தனிநபருக்கான செஸ் போட்டியிலும் சென்னை ஐ.சி.எப். வீரர்களே அதிக புள்ளிகள் எடுத்து சாம்பியன் ஆனார்கள். தனிநபருக்கான போட்டியில் முதல் இடத்தை 6.5 புள்ளிகள் எடுத்து ஐ.சி.எப். வீரர் தீபன் சக்கரவர்த்தி பிடித்தார். 2-வது இடத்தை தலா 6 புள்ளிகள் எடுத்து மேற்கு ரெயில்வே அணி வீரர் திவாரி அர்ஜூன், கொல்கத்தா மெட்ரோ வீரர் ராய்சவுத்ரி சப்தரிஷி, தென்மேற்கு ரெயில்வே வீரர் கிருஷ்ணா ஆகிய மூவரும் பிடித்தனர்.

3-வது இடத்தை சென்னை ஐ.சி.எப். வீரர்கள் ஷியாம்நிகில், கார்த்திகேயன், தெற்கு ரெயில்வே வீரர் ரத்னாகரன், தெற்கு மத்திய ரெயில்வே வீரர் கிரிநாத், மேற்கு ரெயில்வே வீரர் குஷைன் ஹிமால், தென்மேற்கு ரெயில்வே வீரர் தேஜ்குமார், வடக்கு ரெயில்வே வீரர் ஷர்மாகரீஷ், கொல்கத்தா மெட்ரோ வீரர் பாலிட்ஷோமாக் ஆகியோர் பிடித்தனர். இந்த போட்டியில் அதிக புள்ளிகள் எடுத்த முதல் 10 வீரர்கள் தேசிய அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.

பரிசளிப்பு விழாவில் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் உதய்குமார் ரெட்டி, தெற்கு ரெயில்வே விளையாட்டு சங்க செயலாளர் நாகேந்திரபாபு, திருச்சி விளையாட்டு பொறுப்பாளர் கே.சேகர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story