சேத்தியாத்தோப்பு அருகே: ஆற்றில் மூழ்கி பல்கலைக்கழக மாணவி பலி


சேத்தியாத்தோப்பு அருகே: ஆற்றில் மூழ்கி பல்கலைக்கழக மாணவி பலி
x
தினத்தந்தி 10 Oct 2018 3:30 AM IST (Updated: 10 Oct 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பு அருகே ஆற்றில் மூழ்கி பல்கலைக்கழக மாணவி பலியானார்.

சேத்தியாத்தோப்பு,


கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் நடராஜன். கொத்தனார். இவரது மகள் சத்தியபிரியா(வயது 25). இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பில். முதலாம் ஆண்டு படித்து வந்தார். சத்தியபிரியா தன்னுடன் படிக்கும் கடலூரை சேர்ந்த துரை மகள் சிவசங்கரி, செங்காடு பகுதியை சேர்ந்த ஜான் மகள் புனிதா ஆகியோருடன் சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்தூரில் உள்ள தோழி தவசெல்வியை பார்ப்பதற்காக சென்றார்.

இவர்கள் 4 பேரும் நேற்று மதியம் 2 மணியளவில் ஆயிப்பேட்டை வெள்ளாற்றில் குளிக்க சென்றனர். அப்போது கோனாத்து முடக்கு என்ற இடத்தில் சத்தியபிரியா மட்டும் ஆற்றுக்குள் இறங்கினார். அங்கு ஆழம் அதிகமாக இருந்ததால் அவர் நீரில் மூழ்கினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிவசங்கரி, புனிதா, தவசெல்வி ஆகியோர் கூச்சலிட்ட னர். இந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆற்றில் மூழ்கிய மாணவியை தேடினர். நீண்ட நேரத்துக்கு பின் சத்தியபிரியா பிணமாக மீட்கப்பட்டார்.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த ஒரத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான சத்தியபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story