மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி திரைப்பட இயக்குனரிடம் ரூ.50 லட்சம் மோசடி
திரைப்பட இயக்குனரின் மகளுக்கு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த உரக்கடைக்காரர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
வானூர்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே செட்டிக்குளத்தை சேர்ந்தவர் வினோபா (வயது 48). இவர், தனக்கு தெரிந்த ஒருவரின் மகளுக்கு திருச்சி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். ‘சீட்’ வாங்கி கொடுக்க உப்புவேலூர் கிராமத்தை சேர்ந்த பன்னீர் (50) என்பவரை தொடர்பு கொண்டார். அவரும் ‘சீட்’ வாங்கிக்கொடுப்பதாக உறுதியளித்தார். இதற்கு அதிக பணம் செலவாகும் என்று அவர் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து வினோபா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பன்னீரை நேரில் சந்தித்து ரூ.50 லட்சத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட அவர், மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கிக் கொடுக்காமல் காலதாமதம் செய்தார். இதையடுத்து தான் கொடுத்த ரூ.50 லட்சத்தை திருப்பி தருமாறு வினோபா கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை கொடுக்க மறுத்ததுடன், வினோபாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கிளியனூர் போலீஸ் நிலையத்தில் வினோபா புகார் செய்தார். அதில், சென்னையை சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர் ராஜ்கபூரின் மகளுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் வாங்கி கொடுப்பதாக கூறி ரூ.50 லட்சத்தை பன்னீர் பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டதாக கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீரை கைது செய்தனர். அவர் புதுவை ஜிப்மர் முன்னாள் ஊழியர் என்பதும், தற்போது உப்புவேலூர் கிராமத்தில் உரக்கடை நடத்தி வருவதும் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் பன்னீரை கைது செய்த போது பன்னீருக்கு ஆதரவாக புதுவையை சேர்ந்த அற்புதராஜ், மணிவண்ணன், கல்யாண்குமார், சதீஷ்குமார், அன்புராஜ் ஆகியோர் பன்னீரை கைது செய்யவிடாமல் அவருக்கு ஆதரவாக போலீசாரிடம் வாக்குவாதம் செய்து பணிசெய்யவிடாமல் தடுத்தனர். இதை தொடர்ந்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story