பெண் போலீஸ் வீட்டில் நகை–பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
புதுக்கோட்டையில் பெண் போலீஸ் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை சிவகாமி ஆச்சி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி ஹேமாதேவி (வயது 30). இவர் திருச்சி ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். ராஜ்குமார் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இதனால் ஹேமாதேவி தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும் அவர் தற்போது விடுமுறையில் உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹேமாதேவி தனது வீட்டை பூட்டி விட்டு திருச்சியில் தனது உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
பின்னர் நேற்று மதியம் மீண்டும் ஹேமாதேவி வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. பின்னர் வீட்டின் உள்ளே சென்று ஹேமாதேவி பார்த்தப்போது, மர்மநபர்கள் வீட்டின் உள்ளே இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்து 10 பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஹேமாதேவி திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஹேமாதேவி கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை–பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.