போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 Oct 2018 4:45 AM IST (Updated: 10 Oct 2018 4:00 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திரு.வி.க.நகர்,

சென்னை ஓட்டேரி மலையப்பன் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரியான விக்னேஷ், சென்னை பெருநகர போலீஸ் ஆயுதபடையில் வேலை செய்து வருகிறார். கிருஷ்ணகிரி ராயக்கோட்டையை சொந்த ஊராக கொண்ட இவருக்கும் கிருஷ்ணகிரி தேன்கனி கோட்டையை சேர்ந்த என்ஜினியரிங் பட்டதாரியான லட்சுமி (24) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது.

வேலூரில் பயிற்சி பெற்று வந்த இவர் 10 நாட்களுக்கு முன்னர் சென்னையில் பணியமர்த்தப்பட்டார்.

எனவே குழந்தையை லட்சுமியின் தாயார் வீட்டில் விட்டு விட்டு தனது மனைவி லட்சுமியுடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஓட்டேரி மலையப்பன் தெருவில் உள்ள வீட்டுக்கு வாடகைக்கு வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற விக்னேஷ் மதியம் வீட்டுக்கு வந்துள்ளார். நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது மின்விசிறியில் லட்சுமி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். விக்னேஷ் 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஓட்டேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். லட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

வரதட்சணை கொடுமை

தகவல் அறிந்த லட்சமியின் தந்தை ராமசாமி கிருஷ்ணகிரியில் இருந்து ஓட்டேரி வந்து, தனது மகள் வரதட்சணை கொடுமைக்கு ஆளானதால் தற்கொலை செய்திருக்கலாம் என்று ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முகம்மது நாசரிடம் புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story