மோட்டார் சைக்கிளில் ரவுடி பதுக்கி வைத்து இருந்த 27 தோட்டாக்கள் பறிமுதல்
சென்னை கோட்டூர்புரத்தில் ரவுடியின் மோட்டார் சைக்கிளில் பதுக்கி வைத்திருந்த 27 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அடையாறு,
திண்டுக்கல் சின்னாளப்பட்டியை சேர்ந்தவர் ரவுடி மோகன்ராம். நாட்டு துப்பாக்கி தயாரிப்பதில் வல்லவரான இவர் மீது திண்டுக்கல், திருப்பூர், சென்னையில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2014-ம் ஆண்டு சிதம்பரத்தில் ஒருவரை கொல்ல வெடிகுண்டு தயாரித்தபோது, தவறுதலாக அது வெடித்ததில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்கு பின் அவர் உயிர் பிழைத்தார்.
அதன்பிறகு, 2016-ம் ஆண்டு கோவை மாவட்டம் சூலூர், சிந்தாமணிபுதூரில் பழிக்குப்பழியாக மகாதேவன், தியாகராஜன், அருண் ஆகியோரை மோகன்ராம் கும்பல் கொலை செய்தனர்.
பறிமுதல்
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மோகன்ராம் 2 வருடமாக தலைமறைவாக இருந்த நிலையில் மும்பையில் கைது செய்யப்பட்டார். அவரை கோவைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தியபோது சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தனது கூட்டாளியான ரவுடி சீனிவாசன் என்கிற யமகா சீனிவாசனிடம் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இதுபற்றி அறிந்த மயிலாப்பூர் துணை கமிஷனர் மயில்வாகணன் உத்தரவின் பேரில், கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சன் அறிவுறுத்தல்படி, இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, வருவாய் ஆய்வாளர்கள் வாசுகி (கோட்டூர்புரம்), தமிழ்ச்செல்வி (அடையாறு) உள்ளிட்டோர் கோட்டூர்புரம் பீலியம்மன் கோவில் தெருவில் உள்ள சீனிவாசனின் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் வீட்டில் இல்லை. பின்னர் அங்கிருந்த சீனிவாசனின் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 27 தோட்டாக்களை அதிகாரிகள் முன்னிலையில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
வலைவீச்சு
சீனிவாசன் மீது கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே சீனிவாசனை பிடித்தால் தான் துப்பாக்கி தோட்டாக்கள் குறித்த விவரம் தெரியவரும் என்பதால் போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story