பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதியில் மழைநீர் அகற்றும் பணி; கலெக்டர் வீரராகவ ராவ் ஆய்வு
பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதியில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் ஊராட்சியில் 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் வீடுகளை சூழ்ந்துள்ளது. பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் மழைநீர் செல்லும் வாருகால்களை உடனடியாக சீரமைத்து தண்ணீரை வெளியேற்ற ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக ஊராட்சி செயலர் நாகேந்திரன் தலைமையில் ஊராட்சி பணியாளர்கள் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.
ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை அருகில் டி–பிளாக் முதல் டி.ஐ.ஜி. இல்லம் வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை வாருகால்கள் சரி செய்யப்பட்டன. இதன் மூலம் பாரதிநகர், தேசிய நெடுஞ்சாலை, டி–பிளாக் பகுதியில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதியில் தேங்கியுள்ள மழை தண்ணீரை ஊருணிக்கு செல்லுமாறு கால்வாய் அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ், ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை, மண்டபம் யூனியன் (ஊராட்சிகள்) வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, பார்வையிட்டனர்.
இதுகுறித்து ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை கூறியதாவது:– மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் மாவட்டம் முழுவதும் மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊராட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டு உள்ளார். பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்த நிலையில் தற்போது பொதுமக்கள் பாதிக்காதவாறு மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் புதிதாக வாருகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரி செய்யப்பட்டு தண்ணீர் சீராக வெளியேற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஓம்சக்தி நகர், வேல்நகர், பட்டணம்காத்தான், கலெக்டர் அலுவலக பகுதி, பாரதிநகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க கொசு மருந்து, பிளீசிங் பவுடர் தெளிக்க சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது பட்டணம்காத்தான் ஊராட்சி செயலர் நாகேந்திரன் உடனிருந்தார்.