பர்கூர் மலைப்பகுதியில் விடிய–விடிய மழை: பாலாற்றில் வெள்ளப்பெருக்கு; குட்டைகள் நிரம்பின


பர்கூர் மலைப்பகுதியில் விடிய–விடிய மழை: பாலாற்றில் வெள்ளப்பெருக்கு; குட்டைகள் நிரம்பின
x
தினத்தந்தி 11 Oct 2018 3:30 AM IST (Updated: 10 Oct 2018 6:34 PM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் மலைப்பகுதியில் விடிய–விடிய மழை பெய்ததில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் குட்டைகளும் நிரம்பின.

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை வானம் மப்பும்மந்தாரமுமாக காணப்பட்டது. இரவு 7 மணி அளவில் சாரல் மழை பெய்யத்தொடங்கியது. சிறிய நேரத்தில் கனமழையாக கொட்டித்தீர்த்தது. இந்த மழை நேற்று அதிகாலை 4 மணி வரை விடிய–விடிய வெளுத்து வாங்கியது.

இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பர்கூர் மலைக்கிராமத்துக்கு உள்பட்ட தாமரைக்குளம் ஏரி, தட்டக்கடையில் உள்ள ஏரி மற்றும் நகலூர் ஏரிகள் நிரம்பின. தமிழக–கர்நாடக மாநில் எல்லையில் பர்கூரில் உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக குட்டையூர் மற்றும் வேலாம்பட்டி கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் அந்த கிராமங்களுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.

பர்கூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரேநாளில் 2 அடி உயர்ந்து 27 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், பர்கூர் மலைப்பகுதியில் உள்ள வனக்குட்டைகள் அனைத்தும் நிரம்பின.

இதேபோல் பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காடையாம்பட்டி, ஜம்பை, மயிலம்பாடி, ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பவானியைச் சுற்றிலுமுள்ள ஏரி மற்றும் குளங்கள் நிறைந்தன. ஜம்பையில் இருந்து பெரியமோளபாளையம் செல்லும் வழியில் உள்ள கழுங்குகுளம் பகுதியில் உள்ள ஏரி சமீபத்தில் தூர்வாரப்பட்ட நிலையில் தண்ணீர் நிரம்பி வெளியேறுகிறது. ஜம்பை பகுதியில் உள்ள ஏரி நிரம்பியதால் அப்பகுதி வாலிபர்கள் வலைகொண்டு மீன் பிடித்து வருகிறார்கள். இதேபோல் மயிலம்பாடி, வரதநல்லூர், சன்னியாசிபட்டி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் சுமார் 65 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாளகுளம் ஏரி நிரம்பியது. ஏரிகள் நிரம்பி உபரிநீர் ஊராட்சிக்கோட்டை கால்வாய் வழியே வெளியேறி பவானி ஆற்றில் கலந்து வருகிறது.


Next Story