பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; வினாடிக்கு 6,339 கனஅடி தண்ணீர் வருகிறது


பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; வினாடிக்கு 6,339 கனஅடி தண்ணீர் வருகிறது
x
தினத்தந்தி 10 Oct 2018 10:30 PM GMT (Updated: 10 Oct 2018 1:14 PM GMT)

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. வினாடிக்கு 6 ஆயிரத்து 339 கனஅடி தண்ணீர் வருகிறது.

பவானிசாகர்,

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி–அரக்கன்கோட்டை, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழைநீர் பவானிசாகர் அணைக்கு வருகிறது.

கடந்த ஒரு மாதமாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பி வருகிறது. அதன் உபரிநீர் பவானிசாகர் அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் பவானிசாகர் பகுதியிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இதனால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மதியம் 2 மணி நிலவரப்படி அணைக்கு 5 ஆயிரத்து 346 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 101.99 அடியாக இருந்தது. பவானி ஆற்றில் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. மதியம் 2 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 339 கனஅடியாக இருந்தது. இதனால் பவானி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீராக திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.


Next Story