அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாநகராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்


அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாநகராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 10 Oct 2018 10:15 PM GMT (Updated: 10 Oct 2018 1:50 PM GMT)

திருப்பூர் 52–வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாநகராட்சி அலுவலகம் முன்பு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாநகருக்குட்பட்ட பல இடங்களில் அடிப்படை வசதிகள் இதுவரை செய்து கொடுக்கப்படாமலே இருந்து வருகிறது. இதன்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் 52–வது வார்டுக்குட்பட்ட அம்மன்நகர், வள்ளலார் நகர், திருக்குமரன்நகர், முத்தையன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் இதுவரை அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மாநகராட்சி கமி‌ஷனர் சிவக்குமாரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

எங்கள் பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. ஆனால் போதிய சாக்கடை வசதிகளோ, சாலை வசதிகளோ, தெருவிளக்கு வசதிகளோ இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டு வருகிறது. திறந்த வெளியில் சாக்கடை கழிவுநீர் தேங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. பல இடங்களில் தெருவிளக்குகள் இல்லை. பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


Next Story