சபரிமலை தீர்ப்புக்கு எதிராக பெண்கள் போராட்டம்: கம்பம்மெட்டு சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள்
சபரிமலை தீர்ப்புக்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்துவதாக கூறியதை தொடர்ந்து கம்பம்மெட்டு சோதனைச்சாவடியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
கம்பம்,
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்ல குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய 3 மலைப்பாதைகள் உள்ளன. இதில் குமுளி மலைப்பாதையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் இரைச்சல் பாலம், கொண்டை ஊசி வளைவு, மாதாகோவில் வளைவு ஆகிய பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து நிரந்தரமாக மலைப்பாதையை சீரமைக்க அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதனால் குமுளி மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் கம்பம்மெட்டு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இதையொட்டி வழக்கத்தை விட வாகன போக்குவரத்து இரு மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக கம்பம், கூடலூர், போடி, உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள தோட்டங்களுக்கு இந்த மலைப்பாதை வழியாக தான் ஏராளமான தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சபரிமலை தீர்ப்புக்கு எதிராக அய்யப்ப சேவா சங்கம், சபரிமலை தர்ம சமிதி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி, உடும்பன்சோலை, கட்டப்பனை, நெடுங்கண்டம், அடிமாலி உள்ளிட்ட இடங்களில் பெண்கள் போராட்டம் மற்றும் ஊர்வலம் நடத்துவதாக அறிவித்தனர். எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்று கருதி தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு வரும் வாகனங்கள் சிறிது நேரம் நிறுத்தி வைக்குமாறு கட்டப்பனை போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்மோகன், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு தகவல் கொடுத்தார்.
இதுகுறித்து கம்பம்மெட்டு போலீஸ் சோதனைச்சாவடியில் உள்ள போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இந்தநிலையில் போராட்டம் குறித்த நேரம் தெரியாமல் நேற்று காலை 7 மணி அளவில் கேரளாவுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். வழக்கம்போல் அதிகாலையில் ஏலக்காய் தோட்ட வேலைக்கு ஜீப்பில் தொழிலாளர்கள் செல்வார்கள்
இதனால் கம்பம்மெட்டு மலைப்பாதையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே போலீசார், கட்டப்பனை போலீஸ் துணை சூப்பிரண்டுவுக்கு தொடர்பு கொண்டு பேசினர். அப்போது 11 மணியில் இருந்து 12 மணி வரை தான் போராட்டம் நடப்பதாகவும், வாகனங்களை நிறுத்த வேண்டாம் என கூறியதாக தெரிகிறது.
பின்னர் அனைத்து வாகனங்களும் கேரளாவுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டன. போராட்டம் குறித்த நேரம் தெரியாமல் அதிகாலையிலேயே தமிழக போலீசார் வாகனங்களை திடீரென நிறுத்தியதால் ஒரு மணி நேரம் வாகனங்கள் காத்து கிடந்தன. இதனால் பொதுமக்களும், தோட்ட தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
Related Tags :
Next Story