திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த வங்காள தேசத்தை சேர்ந்த 8 பேர் கைது


திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த வங்காள தேசத்தை சேர்ந்த 8 பேர் கைது
x
தினத்தந்தி 10 Oct 2018 11:15 PM GMT (Updated: 10 Oct 2018 6:51 PM GMT)

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வந்த வங்காள தேசத்தை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

நல்லூர்,

பின்னலாடை நகரான திருப்பூரில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகிறார்கள். மேலும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் வர்த்தகம் செய்து வருகிறார்கள். தொழிலாளர்கள் என்ற போர்வையில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் போலி ஆவணங்கள் மூலம் திருப்பூரில் தங்கி இருந்து வேலை செய்து வருவதாக மாநகர போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

அது போல் விசா முடிந்தும் வெளிநாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள் திருப்பூரில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகர பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் விவரங்களை சேகரித்து வருகிறார்கள். மேலும் அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களில் கொடுத்துள்ள ஆவணங்களின் உண்மை தன்மை குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 5–ந் தேதி திருப்பூர் ஊரக போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நல்லூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சென்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இந்தி மற்றும் பெங்காலிமொழி கலந்து பேசினார்கள். மேலும் அவர்கள் கூறிய பதில் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பெங்காலி மொழி தெரிந்த ஒருவரை வரவழைத்து அவர் மூலம் மொழி பெயர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

பின்னர் அவர்கள் வைத்திருந்த ஆதார் அட்டையை வாங்கி போலீசார் ஆய்வு செய்தனர். அந்த ஆதார் அட்டையில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா முகவரி இருந்தது. ஆனால் விசாரணையில் அவர்கள் வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் போலியான ஆதார் அட்டை பெற்றுக்கொண்டு திருப்பூரில் தங்கி இருந்து கடந்த 8 மாதங்களாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்ததாக வங்காள தேசத்தை சேர்ந்த போலால் சந்தர் சாக்கர் (வயது 28), அல் அமின் சித்திக் (24), முகமது பதுல் உசேன் (31), முகமது பர்கத் உசேன் (23), முகமது ரோனி (26) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

இவர்களிடம் நடைபெற்ற தொடர் விசாரணையில், வங்காளதேசத்தை சேர்ந்த இவர்கள் மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளனர். பின்னர் கொல்கத்தாவில் முகமது பாடிலால், உசேன் ஆகியோர் உதவியுடன் ரூ.6 ஆயிரத்திற்கு போலியாக ஆதார் அட்டை பெற்றுக்கொண்டு அங்கிருந்து திருப்பூர் வந்து, செவந்தாம்பாளையம் சாமத்தோட்டம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்தது தெரியவந்தது.

மேலும் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அதே பகுதியில் போலி ஆவணங்கள் கொடுத்து வேலை செய்த வங்காள தேசத்தை சேர்ந்த ராபின் என்கிற முகமது ரபிகுல் இஸ்லாம் (28), முகமது முமின் உருகுசைன் என்கிற முமின் (32) மற்றும் முகமது அஸ்ரபுல் இஸ்லாம் (31) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து இவர்கள் 8 பேரையும் திருப்பூர் 4–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். இதையடுத்து மாஜிஸ்திரேட்டு நித்யகலா அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 8 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story