டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் தாறுமாறாக ஓடிய சரக்கு வாகனம் பயணிகள் நிழற்குடையில் மோதல்; 5 பேர் படுகாயம்


டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் தாறுமாறாக ஓடிய சரக்கு வாகனம் பயணிகள் நிழற்குடையில் மோதல்; 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 11 Oct 2018 4:30 AM IST (Updated: 11 Oct 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் தாறுமாறாக ஓடிய சரக்கு வாகனம் பயணிகள் நிழற்குடையில் மோதியது. இதில் மாணவிகள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி தாலுகா அரவேனு அருகே சக்கத்தா பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 35). சரக்கு வாகன டிரைவர். இவர் நேற்று மாலை 5.15 மணிக்கு தனது சரக்கு வாகனத்தில் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. வாயில் நுரை தள்ளியபடி முருகன் கீழே சாய்ந்ததால், அவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய சரக்கு வாகனம் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் மீது மோதிவிட்டு, பயணிகள் நிழற்குடையில் மோதி நின்றது. இதில் காரும், சரக்கு வாகனமும் சேதம் அடைந்தது.

மேலும் அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பள்ளி மாணவிகள் அபிதா(15), பிரசீபா(15), ஜனனி(11) மற்றும் வடமாநில தொழிலாளர்கள் அபிலேஷ்(28), திப்பேன்(28) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் டிரைவர் முருகன் மற்றும் மாணவிகள் 3 பேரையும் மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வடமாநில தொழிலாளர்கள் 2 பேரும் சரக்கு வாகனத்துக்கு அடியில் சிக்கி கொண்டதால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. பொதுமக்கள் இணைந்து சரக்கு வாகனத்தை தூக்கி, சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு 2 பேரையும் மீட்டனர். அவர்களும் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மாணவி பிரசீபா மற்றும் அபிலேஷ், திப்பேன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்த தகவல் பரவியதால் கோத்தகிரி பஸ் நிலைய பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே அங்கு வந்த போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story