விழுப்புரம் அருகே பயங்கரம்: மருத்துவ கல்லூரி மாணவி துப்பாக்கியால் சுட்டுக்கொலை-காதலித்த போலீஸ்காரரும் தற்கொலை


விழுப்புரம் அருகே பயங்கரம்: மருத்துவ கல்லூரி மாணவி துப்பாக்கியால் சுட்டுக்கொலை-காதலித்த போலீஸ்காரரும் தற்கொலை
x
தினத்தந்தி 10 Oct 2018 9:30 PM GMT (Updated: 10 Oct 2018 7:20 PM GMT)

விழுப்புரம் அருகே மருத்துவ கல்லூரி மாணவி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரை காதலித்த போலீஸ்காரரும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

செஞ்சி, 


விழுப்புரம் அருகே உள்ள அன்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 56) தொழிலாளி. இவருடைய மனைவி மாரியம்மாள். இவர்களது மகள்கள் மான்விழி (25), சரஸ்வதி(23). உடல்நலம் பாதிக்கப்பட்ட சேகர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மாரியம்மாள் பெங்களூருவில் தங்கி, அங்குள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்தார்.

மூத்த மகள் மான்விழி, என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். இளைய மகள் சரஸ்வதி சென்னை கே.கே.நகரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

சரஸ்வதிக்கும், ஈரோடு மாவட்டம் காட்டுப்பாளையத்தை சேர்ந்த ஸ்ரீரங்கன் மகன் கார்த்திவேல்(30) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். கார்த்திவேல் சென்னையில் வி.ஐ.பி. செக்யூரிட்டி பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இருவரும் சென்னையில் இருந்ததால், அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் சரஸ்வதிக்கும், அவருடன் படிக்கும் சக மாணவர் ஒருவருக்கும் நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கார்த்திவேலுடன் பழகுவதை குறைத்து கொண்டதாக தெரிகிறது. இதை கேள்விப்பட்ட கார்த்திவேலுக்கு, சரஸ்வதி தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாரோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக இருவருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு, கடந்த சில மாதங்களாக இருவரும் சரிவர பேசிக் கொள்வதில்லை.

இந்தநிலையில் சரஸ்வதி அக்டோபர் 10-ந்தேதி(அதாவது நேற்று) தனது பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். மேலும் அவர் கார்த்திவேலை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தனது பிறந்த நாளுக்கு அன்னியூருக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து கார்த்திவேல் தனது காதலிக்கு புதிய ஆடை மற்றும் கேக் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு அன்னியூருக்கு வந்தார். காதலரை அன்புடன் வரவேற்ற சரஸ்வதி, அவர் வாங்கி வந்த புத்தாடையை மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டார்.
நள்ளிரவு 12 மணிக்கு கார்த்திவேல், சேகர், மான்விழி ஆகியோருடன் சரஸ்வதி கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

பின்னர் கார்த்திவேல் மற்றும் சரஸ்வதி ஆகியோர் ஒரு அறையில் தனியாக பேசிக் கொண்டிருந்தார்கள். சேகர் தனது மூத்த மகள் மான்விழியோடு மற்றொரு அறையில் டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் காதலர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைகேட்ட சேகர் இருவரையும் சமாதானம் செய்து வைத்தார்.

இதையடுத்து நள்ளிரவு 2 மணியளவில் சரஸ்வதி, கார்த்திவேல் ஆகியோர் இருந்த அறையில் இருந்து அடுத்தடுத்து 3 முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சேகர் தனது மூத்த மகளுடன் அந்த அறைக்கு சென்று பார்த்தபோது சரஸ்வதி மார்பில் 2 குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவருக்கு அருகில் கார்த்திவேல், நெற்றிபொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இதைப்பார்த்து சேகர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். பின்னர் சம்பவம் குறித்து கஞ்சனூர் போலீசுக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் கஞ்சனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரஸ்வதி, கார்த்திவேல் ஆகியோரின் உடல்களை பார்வையிட்டனர். பின்னர் வீட்டில் இருந்த சேகர், அவரது மூத்த மகள் மான்விழி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள்.

முதல் கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் விவரம் வருமாறு:-

கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்த சரஸ்வதி மருத்துவம் படிக்க நுழைவுதேர்வு எழுதினார். ஆனால் அதில் அவரால் வெற்றிபெற முடியவில்லை.

இதையடுத்து அவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படித்து வந்தார். இதனிடையே நடைபெற்ற மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வை சரஸ்வதி எழுதினார். அந்த தேர்வில் அவர் வெற்றி பெற்றதால், நர்சிங் படிப்பை பாதியில் விட்டு விட்டு கடந்த 2016-ம் ஆண்டு சென்னை கே.கே.நகரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் சேர்ந்து எம்.பி.பி.எஸ். படித்து வந்தார்.

முகநூல் பழக்கம் மூலம் காதலரான கார்த்திவேல், தனது காதலி சரஸ்வதியின் படிப்புக்கு அவ்வப்போது செலவு செய்துவந்தார். மேலும் அவரை கல்லூரி விடுதியில் சேர்த்து பாதுகாவலராகவும் இருந்து வந்துள்ளார்.
இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சரஸ்வதியின் படிப்பு முடிந்தவுடன் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று பேசி முடிவு செய்திருந்தனர்.

கடந்த சில மாதங்களாக சரஸ்வதி தன்னை ஒதுக்குவதாகவும், தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாரோ? என்றும் கார்த்திவேல் எண்ணினார். இதனால் சரஸ்வதி மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி கேட்டபோதுதான் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிலநாட்கள் பேசாமல் இருந்துள்ளனர்.
சரஸ்வதியின் பிறந்தநாளுக்கு வந்த இடத்தில், இந்த விவகாரம் அவர்களுக்கு இடையே மீண்டு வெடித்துள்ளது. இதனால் அவர்களுக்குள் நள்ளிரவில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திவேல், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரஸ்வதியை சுட்டுக் கொலை செய்து விட்டு, தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தை அறிந்த கிராம மக்கள் சேகர் வீட்டு முன்பு குவிந்தனர்.

இதனிடையே மருத்துவ கல்லூரி மாணவி சரஸ்வதி, போலீஸ்காரர் கார்த்திவேல் ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து சேகர் கஞ்சனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலித்த மாணவியை போலீஸ்காரரே துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து விட்டு, தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story