வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை; துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை; துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 Oct 2018 10:15 PM GMT (Updated: 10 Oct 2018 7:31 PM GMT)

ஊத்துக்கோட்டையில் நடந்த போலீஸ்–பொதுமக்கள் நல்லுறவு விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டையில் போலீஸ்–பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இதை முன்னிட்டு மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ரகசிய தகவல் கடிதங்களை போட போலீஸ் துறை சார்பாக புதிதாக அறிமுகப்படுத்திய ரகசிய தகவல் புகார் பெட்டியை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:–

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. இதில் குழப்பங்களை விளைவிக்க யாராவது முற்பட்டால் சும்மா இருக்க மாட்டோம். குறிப்பாக வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சில முக்கிய புகார்களை வெளிப்படையாக கொடுக்க தயக்கம் அல்லது பயம் இருப்பவர்கள் போலீஸ் நிலையத்தில் புதிதாக அமைத்துள்ள ரகசிய புகார் பெட்டியில் புகார் மனு அளிக்கலாம்.

அதி முக்கியத்துவம் வாய்ந்த ரகசிய தகவலாக இருந்தால் புகார் அளித்தவர்களின் பெயர்களை வெளியே சொல்ல மாட்டோம். குறிப்பாக பள்ளி மாணவிகள் தங்களுக்கு எதிராக நடக்கும் குற்ற செயல்களை இந்த ரகசிய தகவல் புகார் பெட்டி மூலமாக புகார் கொடுக்கலாம்.

பள்ளி மாணவிகள் மற்றும் பெண்கள் முகநூல், ‘வாட்ஸ் அப்’ மீது அதிக ஈடுபாடு கொண்டு உள்ளதால் நிறைய குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே அவற்றை பயன்படுத்துவதை முடிந்த அளவுக்கு மாணவிகள், பெண்கள் தவிர்க்க வேண்டும்.

குற்றங்களை தடுக்கவும், சமுதாய விழிப்புணர்வு மற்றும் தகவல் பறிமாற்றத்துக்காக போலீஸ்–பொது மக்கள் நல்லுறவு கூட்டத்தை கூட்டினோம். இனி இதுபோன்ற நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story