அடையாறு புற்றுநோய் மையத்துக்கு ரூ.8 கோடி நிலத்தை தானமாக வழங்கிய ஆந்திர தம்பதி


அடையாறு புற்றுநோய் மையத்துக்கு ரூ.8 கோடி நிலத்தை தானமாக வழங்கிய ஆந்திர தம்பதி
x
தினத்தந்தி 11 Oct 2018 4:00 AM IST (Updated: 11 Oct 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

அடையாறு புற்றுநோய் மையத்துக்கு கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ரூ.8 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலத்தை ஆந்திர தம்பதி தானமாக வழங்கியது.

கும்மிடிப்பூண்டி,

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வருபவர் கே.வி.சுப்பாராவ் (வயது 74). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய மனைவி பிரமிளா ராணி(65). இந்த தம்பதியினருக்கு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சூரப்பூண்டி கிராமத்தில் 40 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.8 கோடி ஆகும்.

சுப்பாராவின் தந்தை கிருஷ்ணய்யா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதையடுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சைக்கு வழிஇன்றி கஷ்டப்பட்டு வரும் நபர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை ஏதாவது ஒரு வழியில் செய்திடவேண்டும் என்ற முடிவுக்கு சுப்பாராவ் வந்தார்.

இந்த நிலையில் கும்மிடிப்பூண்டியை அடுத்த சூரப்பூண்டியில் சுப்பாராவ் தம்பதியனருக்கு சொந்தமான ரூ.8 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலத்தை நேற்று சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தின் பெயரில் தானமாக வழங்கி பத்திரப்பதிவு செய்து கொடுத்தனர்.

இதற்கான பத்திரப்பதிவு கும்மிடிப்பூண்டி சார்–பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த தானப்பத்திரத்தை அந்த தம்பதியினரிடம் இருந்து புற்றுநோய் மையத்தின் செயலாளர் டாக்டர் ஏ.வி.லட்சுமணன் பெற்றுக்கொண்டார்.

இது குறித்து சுப்பாராவ் கூறியதாவது:–

எனது தந்தை கிருஷ்ணய்யா, 1974–ம் ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அந்த நேரத்தில் புற்றுநோய்க்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கான முறையான வசதிகள் இல்லை. அந்த காலகட்டத்தில் மிகவும் அரிதாக காணப்பட்ட இந்த புற்றுநோய், தற்போது பரவலாக காணப்படுகிறது. இந்த நோயால் பலரும் பாதிக்கப்பட்டு போதிய சிகிச்சை பெற முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் மனம் உடைந்து போனேன்.

இந்த நோயை பொறுத்தவரையில், சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மையம், மனிதாபிமான முறையில் அதற்கான சிகிச்சையை ஒரு சேவையாகவே வழங்கி வருகிறது. எனவே அந்த மையத்துக்கு எங்களால் முடிந்த உதவியை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் நானும், எனது மனைவியும் சேர்ந்து எங்களது 40 ஏக்கர் நிலத்தை அந்த புற்றுநோய் மையத்துக்கு தானமாக வழங்கி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story