நடுத்தர மக்களை கவரும் வண்டலூர் பூங்கா


நடுத்தர மக்களை கவரும் வண்டலூர் பூங்கா
x
தினத்தந்தி 10 Oct 2018 10:15 PM GMT (Updated: 10 Oct 2018 7:37 PM GMT)

நடுத்தர மக்களை கவரும் பூங்காவாக வண்டலூர் பூங்கா திகழ்கிறது.

வண்டலூர்,

இந்தியாவில் முதன் முதலாக மிருக காட்சி சாலையை பெற்ற பெருமை நமது சென்னை நகரத்தையே சேரும். 1855 –ம் ஆண்டு சென்னை மூர்மார்க்கெட் மற்றும் சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு அருகாமையில் 10.3 ஏக்கரில் மிருககாட்சி சாலை அமைந்து இருந்தது. 1976–ம் ஆண்டு அவற்றை நல்ல நிலையில் வைக்க எண்ணி அப்போது தமிழக முதல்–அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். வண்டலூருக்கு மிருக காட்சி சாலையை மாற்றப்போவதாக சட்ட சபையில் அறிவித்தார். அதன்படி சென்னை அருகே உள்ள வண்டலூர் காப்பு காட்டில் 1500 ஏக்கர் பரப்பளவில் 1979–ம் ஆண்டு ரூ.7½ கோடி செலவில் பணிகள் தொடங்கப்பட்டன.

பின்னர் இந்த மிருக காட்சி சாலை இயற்கையான வனச்சூழலில் மிகவும் நவீன முறையில் அமைக்கப்பட்டது. இதற்கு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என அப்போதைய முதல்– அமைச்சர் எம்.ஜி.ஆர் பெயர் வைத்து, 1985–ம் ஆண்டு இந்த பூங்காவை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார்.

பூங்கா நுழைவு வாயில் மலைக்குகை போல் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் சிறப்பு அம்சங்களாக வண்ணத்துப்பூச்சி பூங்கா, சிங்க உலவிடம், உட்சென்று காணும் பறவைக்கூடம், சிங்கம், புலி, சிங்கவால் குரங்கு, வெள்ளை மயில், யானை, புள்ளி மான், நெருப்புக்கோழி, கரடி, சிறுத்தை, பல்வேறு வகையான முதலைகள் உள்பட 173 வகை விலங்கினங்களும் மொத்தத்தில் 2,378 விலங்குகளும் உள்ளன.

பூங்காவில் நுழைந்த உடனே மனித குரங்குகள் செய்யும் சேட்டைகள் பார்வையாளர்களை வெகுவாக கவருகின்றன. இந்த பூங்காவில் இயற்கையான சூழலில் சுமார் 30 ஹெக்டேர் பரப்பளவில் சிங்க உலவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு காற்று மாசுபடாத பேட்டரி வாகனங்கள் மூலம் சிங்கம் சுதந்திரமாக திரியும் காட்சிகளை அதன் அருகில் சென்று கண்டு மகிழலாம். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகிறது.

இந்த நவீன காலத்திற்கு ஏற்ப பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் ஆன் லைன் மூலம் டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதே போல பூங்காவில் இரவு தங்கிவிட்டு மாறுநாள் பூங்காவை சுற்றிப்பார்க்கும் வசதியும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பூங்காவில் உள்ள முக்கிய விலங்குகளின் நடவடிக்கைகளை நேரடியாக இணையத்தில் பார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக செவ்வாய்க்கிழமை பூங்காவிற்கு விடுமுறையாகும்.


Next Story