சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா லட்சார்ச்சனையுடன் தொடங்கியது


சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா லட்சார்ச்சனையுடன் தொடங்கியது
x
தினத்தந்தி 11 Oct 2018 4:00 AM IST (Updated: 11 Oct 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா லட்சார்ச்சனையுடன் தொடங்கியது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளிஅம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 37-வது ஆண்டு லட்சார்ச்சனை மற்றும் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு மதுரகாளிஅம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று (வியாழக்கிழமை) மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரமும், நாளை (வெள்ளிக்கிழமை) காமாட்சி அம்மன் அலங்காரமும் நடக்கிறது. 13-ந்தேதி ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரமும், 14-ந்தேதி துர்க்கை அம்மன் அலங்காரமும், 15-ந்தேதி கருமாரியம்மன் அலங்காரமும், 16-ந்தேதி மாரியம்மன் அலங்காரமும், 17-ந்தேதி லெட்சுமி அலங்காரமும் நடக்கிறது. 18-ந்தேதி ஆயுதபூஜை விழாவும், சரஸ்வதி அலங்காரம் சென்னை மதுரகாளிஅம்மன் மகாபிஷேக குழு சார்பில் நடக்கிறது. 19-ந்தேதி மகிசாசுரமர்த்தினி அலங்காரமும், இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து அம்மன் புறப்பாடு மற்றும் அம்பு போடுதல் நிகழ்ச்சியுடன் லட்சார்ச்சனை விழா நிறைவு அடைகிறது.

நவராத்திரியின் அனைத்துநாட்களிலும், விஜயதசமி அன்றுவரையும் தினமும் மாலை 4 மணிக்கு லட்சார்ச்சனை தொடங்கி இரவு 7 மணிவரை நடைபெறுகிறது. 7.30 மணிக்கு உற்சவர் மண்டகப்படி நிகழ்ச்சி நடக்கிறது. லட்சார்ச்சனையை செட்டிக் குளம் தண்டாயுதபாணி கோவில் சிவாச்சாரியார் பாலசுப்ரமணியன், புதுச்சேரி வேத பாடசாலை சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தி வைக்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்காரும், இந்து சமய அறநிலையத்துறை திருச்சி உதவி ஆணையருமான ராணி மற்றும் கோவில் நிர்வாக அலுவலர் பாரதிராஜா மற்றும் பணியாளர்கள், மதுரகாளி அம்மன் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Next Story