வனப்பகுதியில் இருந்து பிரிக்கக்கூடாது என வழக்கு: “யானைகள் நாட்டில் வாழ்பவை அல்ல” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து


வனப்பகுதியில் இருந்து பிரிக்கக்கூடாது என வழக்கு: “யானைகள் நாட்டில் வாழ்பவை அல்ல” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
x
தினத்தந்தி 11 Oct 2018 4:15 AM IST (Updated: 11 Oct 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

வனப்பகுதியில் இருந்து யானைகளை பிரிக்கக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில், “யானைகள் காட்டில் வாழ்பவை, நாட்டில் வாழ்பவை அல்ல” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மதுரை,

சென்னையை சேர்ந்த ஆண்டனி கிளின்டன் ரூபின், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:–

முதுமலை வனப்பகுதியில் கடந்த 2007–ம் ஆண்டு தாயை இழந்த நிலையில் 3 வயதுடைய குட்டி யானை ஒன்றை வனத்துறையினர் மீட்டனர். அந்த குட்டி யானை தெப்பக்காடு யானைகள் முகாமில் 9 வயது வரை வளர்க்கப்பட்டது.

பின்னர் அந்த யானையை கடந்த 2016–ம் ஆண்டு அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வழங்கினார். அதற்கு மசினி என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த யானை, பாகன் ராஜேந்திரன் கண்காணிப்பில் வளர்ந்தது.

தெப்பக்காடு வனப்பகுதியில் முகாமில் இருந்தபோது சுறுசுறுப்பாக இருந்த மசினி, சமயபுரம் கோவிலில் தனிமைப்படுத்தப்பட்டதால் அதன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த மே மாதம் 25–ந்தேதி மசினி யானைக்கு மதம் பிடித்தநிலையில் பாகன் ராஜேந்திரனை கோவிலில் வைத்தே மிதித்து கொன்றது. இந்த சம்பவத்தில் 9 பக்தர்களும் காயம் அடைந்தனர்.

இதையடுத்து சிகிச்சைக்காக அந்த யானை தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பப்பட்டது. வனஉயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி யானை, பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்களுள் ஒன்றாக உள்ளது. துன்புறுத்தப்படுவதில் இருந்து யானைகளை பாதுகாக்க சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பல்வேறு வழிகாட்டுதல்களை கூறி உள்ளது.

எனவே தஞ்சாவூர் ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரியில் உள்ள மசினி யானையை முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சேர்க்க வேண்டும். யானைகளை அதன் இருப்பிடமான வனப்பகுதிகளில் இருந்து பிரித்து கோவில் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, “யானைகளை வனப்பகுதியில் இருந்து பிரித்து கோவில்கள் மற்றும் பிற இடங்களில் எந்த அடிப்படையில் வளர்க்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பி இருந்தது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், “மசினி யானைக்கு ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அது குணம் அடைவதற்கு மேலும் சில மாதங்கள் ஆகும். எனவே அதை இப்போதைக்கு காட்டில் உள்ள முகாமுக்கு கொண்டு செல்ல முடியாது. மேலும் கோவில்களில் யானைகள் பாரம்பரியமாக இருந்து வருகின்றன. எனவே அவற்றை கோவில்களில் வளர்ப்பதற்கு தடை விதிக்க முடியாது“ என்று வாதாடினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், யானைகள் காடுகளில் வாழும் உயிரினம். அவை நாட்டில் வாழ்பவை அல்ல” என்று கருத்து தெரிவித்தனர்.

பின்னர் நீதிபதிகள், “மசினி யானைக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வருகிற 29–ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.


Next Story