எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் புதிய தமிழகம் கட்சி போராட்டம் நடத்தும் - டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் புதிய தமிழகம் கட்சி போராட்டம் நடத்தும் என டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எந்த செய்தியை வேண்டுமானாலும் எழுதுவது, எந்த செய்தியை வேண்டுமானாலும் பரப்புவது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்கவிடாமல் சில தனியார் நிறுவனங்கள் தடுப்பதாக தெரிகிறது. மதுரையில் எய்ம்ஸ் அமைய வேண்டும் என்று போராடிய முதல் கட்சி புதிய தமிழகம் தான். எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டபோது இருந்த வேகம் தற்போது இல்லை. எய்ம்ஸ் விவகாரத்தில் தமிழக அரசு தாமதம் காட்டாமல் விரைந்து செயல்பட வேண்டும்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் புதிய தமிழகம் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும். எய்ம்ஸ் மருத்துவமனை பல மாநிலங்களில் 30 படுக்கை வசதிகள், 50 படுக்கை வசதிகளுடன் அமைத்துள்ளனர். ஆனால் மதுரையில் அமையக்கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை குறைந்தது 500 படுக்கைகளுடன் இருக்க வேண்டும். இதற்கான நிதி ஆதாரங்களை மத்திய அரசு வழங்கிட வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் சேகரன் பெயரை வைக்க வேண்டும். அதுபோல், 6, 7, 8–ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இமானுவேல் சேகரன் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.