ஊழியர்களுக்கு சம்பளமே வழங்காத நிலையில் அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வேடிக்கையாக உள்ளது - சிவா எம்.எல்.ஏ. அறிக்கை
புதுவை அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வேடிக்கையாக உள்ளது என்று தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி,
புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
புதுச்சேரி அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், சங்கங்கள், வாரியம், கழகம் ஆகியவற்றில் பணியாற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் 6 மாதம் முதல் ஆண்டுக்கணக்கில் சம்பளம் பெறாமல் உள்ளனர். இந்தநிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் இந்த தொழிலாளர்கள், ஊழியர்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட அரசு என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரோடியர் மில் தொழிலாளர்கள் பாதி சம்பளம் மட்டுமே பெற்று வருகின்றனர். கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்களின் நிலையும் அதோகதியில்தான் உள்ளது. இதுமட்டுமல்ல அரசின் நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் நிரந்தர ஆசிரியர்கள், ஊழியர்கள் நிலுவை சம்பளம், பணிநிரந்தம்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இப்படி இருக்க அரசு துறைகளில் 800 பணியிடங்களை நிரப்பப்போவதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். ஒருபுறம் பணியாற்றும் ஊழியர்களுக்கே சம்பளம் இல்லாதநிலை, மற்றொருபுறம் அரசு பணிக்கு புதிதாக ஆட்களை தேர்வு செய்யப்போவதாக அறிவிப்பு இவை முரண்பாடானது. புதுவை அரசில் 54 துறைகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
குறிப்பாக கல்வித்துறையில் மட்டும் ஆசிரியர், காவலர் என 700 பணியிடங்கள் காலியாக உள்ளன. அப்படி இருக்க யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது போல 10 சதவீத காலி இடங்களை மட்டும் நிரப்ப உள்ளதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. எந்தெந்த துறைகளின் கீழ் 800 ஊழியர்களை அரசு தேர்வு செய்யப்போகிறது? என்ற விவரமும் தெரிவிக்கப்படவில்லை.
ஏற்கனவே காவலர் பணியிடங்களுக்கு வயதுவரம்பினை தளர்த்த கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. தினக்கூலி ஊழியர்களின் பணிநீட்டிப்புக்கும் ஒத்துழைக்க மறுத்து வருகிறார். அரசு பணிக்கு புதிதாக ஆட்களை தேர்வு செய்ய ஒப்புக்கொள்வாரா? என்பதும் கேள்விக்குறியே. பாராளுமன்ற தேர்தலுக்காக இளைஞர்களுக்கு வேலை அளிப்பதுபோன்ற தோற்றத்தை அரசு உருவாக்குகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
யாருடைய ஆட்சியில் பணிக்கு அமர்த்தி இருந்தாலும் பணியில் இருப்பவர்கள் புதுச்சேரியை சேர்ந்தவர்கள்தான். இந்த பணியை நம்பி திருமணம், குடும்ப வாழ்க்கை சூழலை அமைத்திருப்பர். பணிநிரந்தரம் இல்லாவிட்டாலும் 10, 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுகின்றனர். இவர்களது வேலை பறிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகிறது. ஒரு ஊழியரோ, தொழிலாளியோ கூட பணி இழக்கக்கூடாது.
இதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் நிலுவை சம்பளத்தில் பாதியேனும் உடனடியாக வழங்கவேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.