கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்தால் சிறை வார்டர்கள் மீது கடும் நடவடிக்கை - சேலத்தில் சிறைத்துறை டி.ஐ.ஜி. எச்சரிக்கை


கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்தால் சிறை வார்டர்கள் மீது கடும் நடவடிக்கை - சேலத்தில் சிறைத்துறை டி.ஐ.ஜி. எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 Oct 2018 10:00 PM GMT (Updated: 10 Oct 2018 8:33 PM GMT)

கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்தால் சிறை வார்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மத்திய சிறையில் ஆய்வு செய்த சிறைத்துறை டி.ஐ.ஜி.அறிவுடைநம்பி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

சேலம், 


சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 850-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் குறைகளை கேட்பதற்காக கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி.அறிவுடைநம்பி நேற்று முன்தினம் சேலம் வந்தார். பின்னர் அவர், சேலம் சிறையில் ஆய்வு செய்து, கைதிகளிடம் குறைகளை கேட்டார். கைதிகளுக்கு செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பதை தடுப்பது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், நேற்று 2-வது நாளாக டி.ஐ.ஜி.அறிவுடைநம்பி, சேலம் சிறையில் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து சிறைக்காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சீருடைகள், துப்பாக்கி, லத்தி உள்ளிட்டவைகள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் சிறை வார்டர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து சிறைத்துறையில் சிறப்பாக பணியாற்றிய சிறைக்காவலர்களுக்கு தமிழக முதல்-அமைச்சரின் சிறந்த நற்பணிக்கான பதக்கங்களை வழங்கினார். மேலும், சிறையில் சிறப்பாக பணியாற்றிய வார்டர்களுக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டன.

கைதிகளுடன் பழக்கம் வைத்து அவர்களுக்கு நவீன சொகுசு வசதிகளை செய்து கொடுக்கும் சிறை வார்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைத்துறை டி.ஐ.ஜி.அறிவுடைநம்பி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Next Story