சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இந்து அமைப்புகள் சாலைமறியல்; 166 பேர் கைது


சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இந்து அமைப்புகள் சாலைமறியல்; 166 பேர் கைது
x
தினத்தந்தி 11 Oct 2018 3:00 AM IST (Updated: 11 Oct 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்த 166 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி, 


சபரிமலை கோவிலில் பெண்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும். கோவிலில் பல நூறு ஆண்டுகளாக கடைபிடித்து வரும் பாரம்பரியம், புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் சந்தோஷ் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன், பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் சந்தணகுமார், பொதுச் செயலாளர் சிவராமன், மாநகர செயலாளர் பிரபு, விவேகம் ரமேஷ், ஜெயக்குமார், இந்து முன்னணி மாநகர் மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி செயலாளர் செல்வசுந்தர் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு கோஷம் எழுப்பினர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த 53 பேரை கைது செய்தனர்.

திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு அய்யப்ப சேவா சமாஜம் அமைப்பு சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அவர்கள், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் சக்திவேலன், பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், செயற்குழு உறுப்பினர் செந்தில்வேல், ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 52 பேரை திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோன்று விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு அய்யப்ப சுவாமிகள் சேவா சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். சங்க தலைவர் பாபி குருசாமி, பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, செயலாளர் சரவணகிருஷ்ணன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய பொதுச்செயலாளர் கந்தசாமி, நகர தலைவர் முருகன் அழகர்சாமி, வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலைமறியலில் ஈடுபட்ட 24 பேரை விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோன்று கயத்தாறு பழைய பஸ் நிறுத்தத்தில் அய்யப்ப சுவாமிகள் சேவா சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். சங்க நிர்வாகிகள் உச்சிமாகாளி, சண்முகராஜ், ஜோதி, இந்து முன்னணி ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன், இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் லட்சுமிகாந்தன், பா.ஜ.க. வக்கீல் நீதி பாண்டியன், ஆதி நாராயணன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலைமறியலில் ஈடுபட்ட 20 பேரை கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கழுகுமலை-சங்கரன்கோவில் மெயின் ரோடு மேல கேட் பகுதியில் அய்யப்ப சேவா சமாஜம் அமைப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் ஜெயபிரகாசம், பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் போஸ், ஒன்றிய தலைவர் சென்றாய பெருமாள், இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்ட 17 பேரை கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். 

Next Story