அரசியலுக்காக ஊழல் வழக்குகளை தி.மு.க. தொடுக்கிறது அமைச்சர் தங்கமணி பேட்டி


அரசியலுக்காக ஊழல் வழக்குகளை தி.மு.க. தொடுக்கிறது அமைச்சர் தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 10 Oct 2018 11:00 PM GMT (Updated: 10 Oct 2018 9:25 PM GMT)

அரசியலுக்காகவே ஊழல் வழக்குகளை தி.மு.க. தொடுத்து வருவதாக அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார்.

நாமக்கல்,

நாமக்கல்-திருச்செங்கோடு சாலை உணவு தானிய சேமிப்பு கிடங்கு அருகில் இருந்து திருவள்ளுவர்நகர் வழியாக போதுப்பட்டி மயானம் வரை ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவு சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய சாலை அமைப்பதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இதில் நாமக்கல் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கமலநாதன், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத் மற்றும் நகராட்சி பணியாளர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மழை காலத்தில் பாதுகாப்பான முறையில் மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை அங்கு அதிக அளவில் மழை பொழிவதால், மின்சாரம் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டால், அதை சரிசெய்ய அங்கு அதிக அளவில் பணியாளர்களை அமர்த்தி உள்ளோம். மத்திய அரசிடம் இருந்து தினசரி 16 வேகன்களில் நிலக்கரி வந்து கொண்டு இருக்கிறது. இதனால் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை.

அரசியலுக்காகவே ஊழல் வழக்குகளை தி.மு.க. தொடுத்து வருகிறது. நெடுஞ்சாலை துறை மூலம் டெண்டர் விட்டதில் முறைகேடுக்கு முகாந்திரம் இல்லை என ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை கூறி இருப்பதில் இருந்தே தி.மு.க. அரசியலுக்காக குற்றச்சாட்டுகளை கூறுவது தெளிவாகிறது. எங்கள் மடியில் கனமில்லை, அதனால் எந்த பயமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story