புஷ்கர விழாவையொட்டி: நெல்லையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்


புஷ்கர விழாவையொட்டி: நெல்லையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 10 Oct 2018 9:45 PM GMT (Updated: 10 Oct 2018 9:36 PM GMT)

தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி நெல்லையில் இன்று (வியாழக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நெல்லை, 


தாமிரபரணி புஷ்கர விழா இன்று (வியாழக்கிழமை) முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. புஷ்கர விழாவுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தங்களது மோட்டார் சைக்கிள், கார் ஆகியவற்றை நிறுத்துவதற்கு கீழ்கண்ட இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த வாகனங்கள் நிறுத்த இடத்தை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசல் இல்லாமல் தாமிரபரணி புஷ்கர விழா சிறப்பாக நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
நெல்லை சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளி மைதானம், நெல்லை டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி, அரசு பொருட்காட்சி திடல் ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்த வேண்டும். கனரக வாகனங்கள் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மைதானம், பெல் மைதானம், சாந்திநகர் இந்து அறநிலையத்துறை மைதானம் ஆகிய இடங்களில் நிறுத்த வேண்டும்.

குறுக்குத்துறை சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. அதேபோல் மீனாட்சிபுரத்தில் இருந்து குறுக்குத்துறை செல்லும் ரோட்டில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. நெல்லை சந்திப்பு அண்ணாசிலையில் இருந்து கைலாசபுரம் செல்லும் சாலையிலும் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து விழா நடைபெறும் இடத்துக்கு அனுமதிக்கப்படும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் குறுக்குத்துறை ரெயில்வே லெவல் கிராசிங் மற்றும் மீனாட்சிபுரம் ரெயில்வே லெவல் கிராசிங் வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
அதற்கு மேல் செல்லக்கூடாது. மேற்கண்ட வாகன நிறுத்தும் இடங்களை தவிர வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது.

நெல்லை சந்திப்பு முதல் டவுன் மற்றும் மீனாட்சிபுரம் ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் செல்லும் வழி ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் இன்று (வியாழக்கிழமை) முதல் 23-ந் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story