ஓட்டுனர் உரிமத்துக்கு ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் வசதி அமல்


ஓட்டுனர் உரிமத்துக்கு ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் வசதி அமல்
x
தினத்தந்தி 11 Oct 2018 3:00 AM IST (Updated: 11 Oct 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ‘ஆன்லைனில்’ கட்டணம் செலுத்தும் வசதி அமல்படுத்தப்பட்டு உள்ளது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை, 

2012-ம் ஆண்டு முதல் வாகனங்களுக்கு பதிவு கட்டணம் மற்றும் வரி இணையதளம் மூலம் செலுத்தும் வசதி செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக வாகனம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும், அதாவது பெயர் மாற்றம் செய்தல், உரிமம் மாற்றம் செய்தல் போன்ற அனைத்து பணிகளும் இணையதளம் மூலம் மனு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான கட்டணம் கணினி வழியாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், பதிவு அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது விண்ணப்பதாரர் அதற்குரிய கட்டணத்தை மட்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேரடியாக சென்று செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் ஓட்டுனர் பழகுனர் உரிமம், நிரந்தர ஓட்டுனர் உரிமம், முகவரி மாற்றம் செய்தல், நகல் ஓட்டுனர் உரிமம் பெறுதல் ஆகியவற்றுக்கான கட்டணத்தை தங்களது இருப்பிடத்தில் இருந்து ஆன்லைனில் செலுத்தும் திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து உள்ளார்.

இதற்கு https:/pa-r-iv-a-h-an.gov.in/sar-at-h-is-e-rv-i-c-e-c-ov6/sar-at-h-i-H-o-m-e-Pu-p-l-ic.do என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்கான தொகையை ‘ஆன்லைன்’ மூலம் செலுத்தி பயன் பெறலாம். அதில் அதற்குரிய ஒப்புகை சீட்டும் பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த ஒப்புகை சீட்டு அல்லது பணம் செலுத்தியதற்கான ரசீதுடன் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு அல்லது மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று தேர்வில் பங்கேற்று ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இதுபோன்று வட்டார போக்குவரத்து அலுவலக பணிகள் அனைத்தும் படிப்படியாக ரொக்கமில்லா பணபரிவர்த்தனை செய்யவும், மற்ற சேவைகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் பெறவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story