மாவட்ட செய்திகள்

சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்கியது - மைசூரு தசரா விழா கோலாகலம் + "||" + Began with a special pooja for Samundiswari Amman - Mysore Dhasara pooja Festival

சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்கியது - மைசூரு தசரா விழா கோலாகலம்

சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்கியது - மைசூரு தசரா விழா கோலாகலம்
உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழா சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மைசூரு,

விஜயநகர சாம்ராஜ்ய காலத்தில் இருந்து மைசூரு தசரா விழா கொண்டாடப்பட்டு வருவதாக வரலாறு கூறுகிறது. கன்னட கலாசாரங்களை பறைசாற்றும் விதமாகவும், கர்நாடகத்தின் அடையாளமாகவும் உலக அளவில் புகழ்பெற்று விளங்குவது மைசூரு தசரா விழா.


தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியாக நடக்கும் ஜம்புசவாரி ஊர்வலம் காண்போரை மெய் சிலிர்க்க வைக்கும். ஜம்பு சவாரி ஊர்வலத்தில் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை யானைகள் புடை சூழ அர்ஜூனா யானை சுமந்து ராஜ நடைபோட்டு ஊர்வலமாக செல்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அதைக் காண்பதற்காகவே கர்நாடகத்தில் இருந்து மட்டுமல்லாது, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக் கணக்கானோர் மைசூருவுக்கு வருவார்கள்.

இது ஒருபுறம் இருக்க தசரா விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், அரண்மனை சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், மைசூரு மன்னர் தனியார் தர்பார் நடத்துவது என்று பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகள் நடக்கும். இதனால் மைசூரு நகரமே கலைகட்டும். கோலாகலமாக இருக்கும். இப்படி பல்வேறு சிறப்புமிக்க மைசூரு தசரா விழா இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி(அதாவது நேற்று) தொடங்கி 19-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதற்கான ஏற்பாடுகள் மைசூரு மாவட்ட நிர்வாகம், அரண்மனை நிர்வாகம், மாநில அரசு ஆகியவை சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு வந்தது. மேலும் தசரா விழாவை தொடங்கி வைக்க இன்போசிஸ் அறக்கட்டளை தலைவரும், எழுத்தாளருமான சுதா மூர்த்தி அழைக்கப்பட்டிருந்தார். அதற்காக அவர் நேற்று முன்தினமே பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு தனி விமானத்தில் வந்தார். அதேபோல் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்க வேண்டிய மந்திரிகளும், நேற்று முன்தினமே மைசூருவை வந்தடைந்தனர்.

இந்த நிலையில் திட்டமிட்டபடி நேற்று காலையில் மைசூரு தசரா விழா கோலாகலமாக தொடங்கியது. மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் மங்கள வாத்தியங்கள் முழங்க அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தசரா விழா தொடங்கியது.

எழுத்தாளர் சுதா மூர்த்தி, காலை 7.30 மணியளவில் துலா லக்கனத்தில் சாமுண்டீஸ்வரி கோவில் வளாகத்தில் அமைந்திருக்கும் மேடை அருகில், வெள்ளித்தேரில் வீற்றிருந்த சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மலர்கள் தூவி தசரா விழாவை தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் முதல்-மந்திரி குமாரசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பு மந்திரி ஜி.டி.தேவேகவுடா, சுற்றுலா மந்திரி சா.ரா.மகேஷ் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

இதையடுத்து தொடக்க விழாவில் சுதா மூர்த்தி பேசும்போது கூறியதாவது:-

நான் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவள். ஆனால் கர்நாடகாவிற்கு மருமகளாக வந்திருக்கிறேன். எனக்கு கர்நாடகம் மிகவும் பிடிக்கும். மறுஜென்மம் என்ற ஒன்று இருந்தால், மீண்டும் நான் கர்நாடகத்திலேயே பிறக்க ஆசைப்படுகிறேன். கன்னட மொழி அழகான மொழி. பல்வேறு சிறப்பு மிக்க கன்னட நாட்டில், மிகவும் சிறப்புவாய்ந்த தசரா விழாவை தொடங்கி வைக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த மாநில அரசுக்கும், மக்களுக்கும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.

மைசூரு மாகாணத்தை ஆண்ட மன்னர்கள் கன்னட நாடு, கன்னட மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டிருக்கிறார்கள். அதனால்தான் கன்னட மொழி, கன்னட கலாசாரம் நிலையான இடத்தை பெற்றுள்ளது. இங்குள்ள அனைவருக்கும் பெருமை சேர்த்து வருகிறது.

குடகு மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக லட்சக்கணக்கானவர்கள் வீடு, உடைமைகள் என அனைத்தையும் இழந்துள்ளனர். இன்போசிஸ் அறக்கட்டளை சார்பில் குடகில் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.25 கோடி செலவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். பெங்களூரு ஹெப்பாலில் ரூ.15 கோடி செலவில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நான் எத்தனை மொழிகளை கற்றிருந்தாலும் அது கன்னடம் போல் இல்லை. எனது வீட்டின் தாய் மொழி கன்னட மொழி என்று சுதா மூர்த்தி பேசினார்.

பின்னர் தசரா விளையாட்டு போட்டிகளுக்கான ஜோதியை தொடங்கி வைத்து முதல்-மந்திரி குமாரசாமி கூறியதாவது:-

மைசூரு தசரா விழாவை நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பெண் தொடங்கி வைத்திருக்கிறார். இது அனைத்து பெண்களுக்கும் கிடைத்த பெருமை. நான் அதிரடியாக அரசியலுக்கு வந்து, தற்செயலாக 2 முறை முதல்-மந்திரி ஆகி உள்ளேன். இந்த மாநிலம் என்னால் மட்டுமே வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக, சாமுண்டீஸ்வரி அம்மன் என்னை முதல்-மந்திரி ஆக்கியிருக்கிறார்.

மக்களின் ஆதரவு இருந்தால், மாநிலத்தை நல்ல முறையில் வழிநடத்தலாம். மாநிலத்தில் எந்த பிரச்சினை இருந்தாலும் அதை தீர்ப்பதற்கு தயாராக இருக்கிறேன். விவசாயிகள் மட்டுமல்லாது, யாரும் தற்கொலை முடிவை எடுக்க வேண்டாம். யாரும் அனாதையாகவும், ஆதரவு இல்லாமலும் இருந்துவிடக்கூடாது என்று குமாரசாமி கூறினார்.

இதையடுத்து பேசிய மாவட்ட பொறுப்பு மந்திரி ஜி.டி.தேவேகவுடா கூறியதாவது:-

தசரா விழாவுக்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இன்று(அதாவது நேற்று) முதல் வருகிற 20-ந் தேதி வரை மைசூரு-பெங்களூரு இடையே விமானம் இயக்கப்படுகிறது. தசரா விழாவை முன்னிட்டு தினமும் 3 முதல் 4 முறை பெங்களூரு-மைசூரு இடையே இருமார்க்கமாக இந்த விமான சேவை நடைபெறும்.

72 பேர் மட்டுமே பயணிக்க கூடிய வகையில் உள்ள இந்த விமானத்தின் மூலம் மைசூருவில் இருந்து பெங்களூருவை அரைமணி நேரத்தில் சென்றடையலாம். அதற்காக ஒரு நபருக்கு ரூ.999 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தசரா விழா நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் மைசூரு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் போராட்ட பிரச்சினை எழுப்பினர். அவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று(அதாவது நேற்று முன்தினம்) நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் துப்புரவு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பதாக உறுதி அளித்தார்.

அதன்பேரில் துப்புரவு தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. அவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது.

இன்னும் 10 ஆண்டுகளில் பெங்களூருவைப் போலவே மைசூருவும் பெரிய நகரமாக உருவெடுக்கும். அதனால் மைசூரு-பெங்களூரு இடையேயான சாலையை 10 வழிச்சாலையாக மாற்ற வேண்டும். மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தை சர்வதேச அளவில் தரம் உயர்த்தி, சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளில் நான் ஈடுபட்டுள்ளேன்.

இவ்வாறு மந்திரி ஜி.டி.தேவேகவுடா கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. விரதம் இருந்து அத்தி மரத்துக்கு சிறப்பு பூஜை செய்தவரால் பரபரப்பு
அடுத்த ஜென்மத்தில் தனக்கு நல்ல மனைவி அமைய வேண்டும் என விரதம் இருந்து அத்தி மரத்துக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தியவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.