கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் வாசுகி பங்கேற்பு


கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் வாசுகி பங்கேற்பு
x
தினத்தந்தி 12 Oct 2018 4:30 AM IST (Updated: 11 Oct 2018 8:10 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில் ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் வாசுகி கலந்து கொண்டார்.

நாகர்கோவில்,

விவசாய தொழிலாளர்கள், ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், முதிர்கன்னிகள், தனித்து வாழும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் பக்கவாதம், புற்றுநோய், விபத்தால் ஏற்பட்ட ஊனம், படுக்கையில் கிடக்கும் நிலையில் உள்ள அனைவருக்கும் நிபந்தனையற்ற ஓய்வூதியம் ரூ.1000 வழங்கக்கோரி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ரெகுபதி ஆகியோர் தலைமை தாங்கினர். சாகுல்ஹமீது, டெல்பின், ராஜதாஸ் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், ஜனநாயக மாதர்சங்க மாநில நிர்வாகி உஷா, மாவட்ட தலைவர் மேரி ஸ்டெல்லாபாய், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் கிறிசாந்து மேரி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் வாசுகி சிறப்புரையாற்றினார்.

இதில் விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர்களும், ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்தவர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதையடுத்து போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

முன்னதாக ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் வாசுகி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நிபந்தனைகள் என்ற பெயரில் ஏழை மக்கள் அரசு உதவிகள் பெறுவது தடுக்கப்படுகிறது. இது அவர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில்கூட பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மோடி அளித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. மோடி ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை.

ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக மோடி கூறினார். அப்படி கொடுத்திருந்தால் இந்த 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் 10 லட்சம் பேருக்குகூட மத்திய அரசு வேலை கொடுத்திருக்குமா? என்றால் கேள்விக்குறிதான். இதைக்கண்டித்தும், எங்கே என் வேலை என்று கேட்டும் அடுத்த மாதம் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெற உள்ளது.

 சாமானியர்கள் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று மோடி சொன்னார். 15 காசுகூட செலுத்தப்படவில்லை. அதேநேரத்தில் வங்கி கணக்கில் குறைந்தபட்ச டெபாசிட் தொகை இருப்பில் வைக்காதவர்களுக்கு அபராதம் என்ற பெயரில் ரூ.12 ஆயிரம் கோடி பணத்தை ஏழைகளிடம் இருந்து வங்கிகள் எடுத்துள்ளன.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு மீண்டும் மக்கள் வாக்களித்து வெற்றிபெற செய்வார்கள் என்று கூறியுள்ளார். இந்த தேர்தலில் மீண்டும் மோடி வெற்றி பெற்றால் நிலைமை படுமோசமாகி விடும்.

இவ்வாறு வாசுகி கூறினார்.

Next Story