முறப்பநாடு-ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணியில் பக்தர்கள் புனித நீராடினர் ; ஆற்றுக்கு தீபாராதனை நடந்தது
மகா புஷ்கர விழாவையொட்டி முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தாமிரபரணி ஆற்றில் நேற்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். ஆற்றுக்கு தீபாராதனை நடத்தப்பட்டது.
தூத்துக்குடி,
மகா புஷ்கர விழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதி பாயும் முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஏரல், முக்காணி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. குரு தலமான முறப்பநாட்டில் தாமிரபரணி நதி தெற்கு நோக்கி பாய்வதால், தட்சண கங்கை என்று சிறப்பு பெறுகிறது.
தாமிரபரணி ஆற்றின் ராசியான விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி அடைந்ததையொட்டி, முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். காலையில் தாமிரபரணி ஆற்றின் படித்துறை அருகில் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து திரளான பக்தர்கள் ஆற்றில் புனித நீராடினர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர் மாலையில் ஆற்றின் படித்துறை அருகில் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட புனித நீர் எடுத்து செல்லப்பட்டு, தாமிரபரணி ஆற்றுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஆற்றுக்கு தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆற்றில் புனித நீராடினர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.
மகா புஷ்கர விழாவை முன்னிட்டு, ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள தாமிரபரணி ஆற்றின் படித்துறை அருகில் நேற்று காலையில் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து திரளான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் மாலையில் யாகசாலை பூஜை நடந்தது. பூஜையில் வைக்கப்பட்ட கும்பத்தில் இருந்து புனித நீர் எடுத்து செல்லப்பட்டு, தாமிரபரணி நதிக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தாமிரபரணி நதிக்கு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆழ்வார்திருநகரி சங்கு படித்துறை அருகில் உள்ள நரசிம்ம சன்னதியில் மாலையில் யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றி, தாமிரபரணி ஆற்றுக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ஆற்றில் புனித நீராடினர்.
இதேபோன்று முக்காணி ராம பரமேசுவரர் கோவில் படித்துறை, வெங்கடேச பெருமாள் கோவில் படித்துறை, சேர்ந்தபூமங்கலம் சங்கமம் படித்துறை, கைலாசநாத சுவாமி கோவில் படித்துறையிலும் தாமிரபரணி ஆற்றுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர் அவர்கள் ஆற்றில் புனித நீராடினர்.
Related Tags :
Next Story