கால்வாய் உடைந்ததால் வீணாகிய வைகையாற்று தண்ணீர்


கால்வாய் உடைந்ததால் வீணாகிய வைகையாற்று தண்ணீர்
x
தினத்தந்தி 11 Oct 2018 9:30 PM GMT (Updated: 11 Oct 2018 6:57 PM GMT)

திருப்புவனம் அருகே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வைகையாற்று தண்ணீர் வீணாக வெளியேறியது. இதையடுத்து அந்த பகுதி விவசாயிகள் ஒன்று சேர்ந்து அடைப்பை சரி செய்தனர்.

மானாமதுரை, 


மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக வைகையாற்றில் மழை நீர் வரத்து இருந்து வந்தது. இதையடுத்து வைகையாற்றின் வலது பிரதான கால்வாய் மூலம் விவசாயிகள் கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து திருப்புவனம், பிரமனூர், மாரநாடு உள்ளிட்ட கால்வாய்களில் இந்த தண்ணீர் சென்றது.

பிரமனூர் கால்வாயில் இருந்து திருப்புவனம், வன்னிகோட்டை, வாவியேரந்தல் வழியாக அந்த பகுதியில் உள்ள கண்மாய்க்கு தண்ணீர் சென்றது. இந்தநிலையில் திருப்புவனத்தில் இருந்து செல்லும் கால்வாய்கள் சரிவர பராமரிக்கப்படாமல் சேதமடைந்த நிலையில் இருந்ததால், இந்த வழியாக சென்ற தண்ணீரின் வேகத்தால், திருப்புவனத்தை அடுத்த வில்லியரேந்தல் அருகே உள்ள கால்வாயில் தண்ணீர் உடைப்பு ஏற்பட்டு அதன் அருகில் இருந்த தென்னந்தோப்பு மற்றும் செங்கல் காளவாசலை தண்ணீர் சூழ்ந்து வீணாகியது.

தகவலறிந்த பிரமனூர் மற்றும் வயல்சேரி பகுதி விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் அந்த கால்வாய் உடைப்பை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். காலை தொடங்கிய இந்த பணி மாலையில் நிறைவு பெற்றது. இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறியதாவது:- பிரமனூர் கண்மாய் கடந்த 6 வருடங்களாக தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது.

மேலும் இந்த பகுதி மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் தண்ணீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். போதிய மழை இல்லாததால் இங்குள்ள விவசாய கிணறுகள் வறண்ட நிலையில் காணப்பட்டன. இதையடுத்து சமீபத்தில் பெய்த மழை காரணமாக வைகையாற்றில் தண்ணீர் வந்தது.

இந்த தண்ணீரை எங்கள் பகுதியில் உள்ள கண்மாய்க்கு வரத்து கால்வாய் மூலம் கொண்டு சென்றபோது, கால்வாய் சரிவர பராமரிக்கப்படாததால் திடீரென உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் முழுவதும் அருகில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்து வீணாகியது. இதையறிந்த அனைவரும் ஒன்று திரண்டு, கால்வாய் உடைப்பை காலை முதல் மாலை வரை சரி செய்துள்ளோம்.

வைகையாற்றில் இருந்து தண்ணீர் தொடர்ந்து 20 நாட்களுக்கு வந்தால் இங்குள்ள கண்மாய்கள் எல்லாம் ஓரளவிற்கு நிரம்பும். வைகை அணையில் 60 அடிக்கு மேல் தண்ணீர் உள்ள நிலையில், அரசு வைகையாற்றில் இப்போதே தண்ணீர் திறந்தால் இந்த பகுதியில் இன்னும் 2 ஆண்டிற்கு விவசாயம் செய்யலாம். எனவே வைகை ஆற்றில் கூடுதலான நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story