மானாமதுரை அரசு பள்ளியில் ஒரே சீருடையில் ஆசிரியர்கள், மாணவர்கள்


மானாமதுரை அரசு பள்ளியில் ஒரே சீருடையில் ஆசிரியர்கள், மாணவர்கள்
x
தினத்தந்தி 12 Oct 2018 3:15 AM IST (Updated: 12 Oct 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அரசு பள்ளியில் ஆசிரியர்களும், மாணவ-மாணவிகளும் ஒரே சீருடையில் வருவதால், இந்த பள்ளி அரசு பள்ளிகளிடையே முன்னுதாரணமாக விளங்கி வருகிறது.

மானாமதுரை, 

அரசு பள்ளிகள் என்றாலே ஒருவித குறைபாடுகளுடன் இருக்கும் என்ற பொதுமக்களின் எண்ணத்தை, சமீப காலமாக அரசு பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் மாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் மானாமதுரை பர்மா காலனியில் கடந்த 35 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்பட்டு வருவதுடன் ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளும் ஒரே மாதிரி சீருடையில் வருகின்றனர். மேலும் பள்ளி கல்வியில் சிறந்து விளங்கி வருகிறது. இங்கு 165 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். தலைமையாசிரியர் ஞானசேகரனையும் சேர்த்து 8 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

இந்தநிலையில் அரசு தரும் சீருடையை அணிந்து வரும் மாணவ-மாணவிகள் மத்தியில், ஆசிரியர்கள் பலவித கலர்களில் உடை அணிந்து வருவது வித்தியாசத்தை ஏற்படுத்தியது. இதை அறிந்த தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் அனைவரும் மாணவ-மாணவிகள் போன்று சீருடை அணிய முடிவு செய்தனர்.

அதன்படி மாணவர்களின் சீருடை போன்ற கலரில் ஆசிரியர்களும் உடையணிந்து வருவதால், மாணவ-மாணவிகள் ஆசிரியர்களுடன் சகஜமாக கலந்து பேசி கல்வியில் சிறந்து விளங்கி வருகின்றனர். இந்த பள்ளியில் ஆங்கில வழிகல்வியும் இருப்பதால் மாணவ, மாணவியர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த ஒரே சீருடை மாற்றத்தால் மானாமதுரை அரசு பள்ளி, மற்ற அரசு பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறது.

Next Story