புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வேண்டும் கலெக்டரிடம், பொதுமக்கள் வலியுறுத்தல்


புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வேண்டும் கலெக்டரிடம், பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Oct 2018 11:00 PM GMT (Updated: 11 Oct 2018 7:21 PM GMT)

திருவிடைமருதூர் அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக்கடையை உடனே மூட வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த ஒழுகச்சேரியை சேர்ந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் தலைமையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அண்ணாதுரையிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருவிடைமருதூர் அருகே உள்ள ஒழுகச்சேரி கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தால் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாக இருக்கும். மேலும் கடையின் அருகே உள்ள கோவில்களில் பூஜைகள் நடைபெறுவதும் பாதிக்கப்படும்.

மேலும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் சுடுகாட்டிற்கு இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். தற்போது எந்த பிரச்சினையும் இல்லாமல் உள்ளது. டாஸ்மாக் கடை வந்தால் வீண் தகராறு ஏற்படும் எனவே இங்கு திறக்க அனுமதிக்கக்கூடாது என கூறி மனு கொடுத்தனர். கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.

இது குறித்து கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது கடை திறக்கப்படவில்லை. மனு பரிசீலனையில் உள்ளது என தெரிவித்தனர். அப்போது நீதிமன்றம், கடை திறந்தால் மனுதாரரான முன்னாள் ராணுவ வீரரான கணேசனின் கருத்தை கேட்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில் திடீரென நேற்று முன்தினம் கடை திறக்கப்பட்டுள்ளது. இது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. எனவே திறக்கப்பட்ட கடையை நிரந்தரமாக மூடி பொதுமக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Next Story